கர்நாடக அணைகளில் இருந்து, காவிரியில் திறக்கப்பட்ட தண்ணீர் பிலிகுண்டுலு வந்தது


கர்நாடக அணைகளில் இருந்து, காவிரியில் திறக்கப்பட்ட தண்ணீர் பிலிகுண்டுலு வந்தது
x
தினத்தந்தி 9 Aug 2019 10:45 PM GMT (Updated: 9 Aug 2019 11:19 PM GMT)

கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்ட தண்ணீர் நேற்று பிலிகுண்டுலுவை வந்தடைந்தது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.

பென்னாகரம்,

கர்நாடக, கேரள மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள கிரு‌‌ஷ்ணராஜசாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் இந்த 2 அணைகளில் இருந்தும் தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. கர்நாடகாவில் நேற்று முன்தினம் காவிரி ஆற்றில் வினாடிக்கு 1 லட்சம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.

இந்த தண்ணீர் கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நேற்று மாலை 5 மணி அளவில் கரைபுரண்டு வந்தது. இதைத்தொடர்ந்து அந்த தண்ணீர் பெருக்கெடுத்து ஒகேனக்கல்லை வந்தடைந்தது. இந்த நிலையில் நேற்று மாலை 5 மணி நிலவரப்படி வினாடிக்கு 28 ஆயிரம் கனஅடி தண்ணீர் ஒகேனக்கல்லுக்கு வந்தது. இந்த நீர்வரத்து இரவு 7 மணி நிலவரப்படி வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதனால் ஒகேனக்கல்லில் ஐந்தருவி, சினிபால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப் பரித்து கொட்டுகிறது.

காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் ஒகேனக்கல்லில் மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதையில் சுமார் 1 அடி உயரத்திற்கு தண்ணீர் செல்கிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருதி நடைபாதைக்கு செல்லும் நுழைவுவாயிலை போலீசார் பூட்டி சீல் வைத்துள்ளனர். மேலும் ஒகேனக்கல், நாகமரை, நெருப்பூர் உள்ளிட்ட காவிரி கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் அறிவுறுத்தினர்.

மேலும் போலீசார் சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றில் இறங்க வேண்டாம் என்று ஒலிப்பெருக்கி மூலம் அறிவுறுத்தி வருகின்றனர். ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பரிசல் இயக்கவும், குளிக்கவும் விதிக்கப்பட்ட தடை நேற்று 2-வது நாளாக நீடித்தது. மேலும் போலீசார், ஊர்க்காவல் படையினர் காவிரி கரை மற்றும் பல்வேறு இடங்களில் ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர்.

காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளதை அடுத்து ஒகேனக்கல்லில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தீயணைப்பு படை வீரர்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர். ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் பிலிகுண்டுலு பகுதியில் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

இந்த நீர்வரத்து இன்று (சனிக்கிழமை) மேலும் அதிகரிக்க கூடும் என்று மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் காலை வினாடிக்கு 5 ஆயிரத்து 97 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து 1000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. நீர்மட்டம் 53.98 அடியாக இருந்தது. நேற்று காலை வினாடிக்கு 5 ஆயிரத்து 236 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. நீர்மட்டம் 54.50 அடியாக இருந்தது. கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் மேட்டூர் அணையை இன்று (சனிக்கிழமை) அதிகாலை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story