வேடசந்தூர் அருகே, பால தடுப்பு சுவரில் மோதி வேன் கவிழ்ந்தது, பெண் தொழிலாளி பலி - 21 பேர் படுகாயம்
வேடசந்தூர் அருகே பால தடுப்பு சுவரில் மோதி வேன் கவிழ்ந்ததில் பெண் தொழிலாளி பலியானார்.
வேடசந்தூர்,
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே சேணன்கோட்டையில் தனியார் சோப்பு தயாரிக்கும் ஆலை ஒன்று உள்ளது. இந்த ஆலையில் கரூர் மாவட்டம் கடவூர், இடையபட்டி, புங்கம்பாடி ஆகிய பகுதிகளில் இருந்து வேலைக்கு தொழிலாளர்கள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் நேற்று அந்த பகுதிகளில் இருந்து தொழிலாளர்களை ஏற்றிக் கொண்டு ஆலைக்கு வேன் ஒன்று வந்து கொண்டிருந்தது. வேனை, கடவூரை சேர்ந்த பெருமாள் (வயது 32) என்பவர் ஓட்டி வந்தார்.
எரியோடு-வேடசந்தூர் சாலையில் தண்ணீர்பந்தம்பட்டி என்னுமிடத்தில் வேன் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் மறுபக்கம் வேன் சென்றது. வேனில் இருந்த தொழிலாளர்கள் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று கூச்சலிட்டனர். அதற்குள் அந்த வேன் பாலத்தின் தடுப்புச்சுவரில் மோதி பள்ளத்தில் பாய்ந்தது.
உடனே அக்கம்பக்கத்தினர் அங்கு வந்து படுகாயமடைந்த தொழிலாளர்களை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்சுகள் மூலம் வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் கரூர் மாவட்டம் புங்கம்பாடியை சேர்ந்த பாண்டியன் மனைவி சுமதி (35) என்பவர் பரிதாபமாக இறந்தார்.
விபத்தில் படுகாயமடைந்த வேன் டிரைவர் பெருமாள், நாகலட்சுமி (37), தாஸ் (50), மற்றொரு பெருமாள் (26), கரூர் மாவட்டம் இடையபட்டியை சேர்ந்த சித்ரா (30), பழனிச்சாமி(46), திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையை சேர்ந்த வீரபாபு (42) உள்பட 21 பேருக்கு வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விபத்து குறித்து எரியோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முரளி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story