உயிரிழந்த தந்தை உடல் முன்பு காதலியை திருமணம் செய்த ஆசிரியர் - திண்டிவனம் அருகே நெகிழ்ச்சி


உயிரிழந்த தந்தை உடல் முன்பு காதலியை திருமணம் செய்த ஆசிரியர் - திண்டிவனம் அருகே நெகிழ்ச்சி
x
தினத்தந்தி 10 Aug 2019 5:30 AM IST (Updated: 10 Aug 2019 4:50 AM IST)
t-max-icont-min-icon

திண்டிவனம் அருகே உயிரிழந்த தந்தை உடல் முன்பு காதலியை ஆசிரியர் திருமணம் செய்தார்.

மயிலம், 

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள சிங்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் தெய்வமணி. இவருடைய மகன் அலெக்சாண்டர்(வயது 27). இவர் மயிலத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், அதேபள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்த மயிலம் அடுத்த குணமங்கலத்தை சேர்ந்த பாலசுந்தரம் மகள் ஜெகதீஸ்வரி(23) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மலர்ந்தது. இருவரும் ஒருவரையொருவர் தீவிரமாக காதலித்தனர். இது பற்றி தெரிந்ததும் இருவீட்டு பெற்றோரும் காதலுக்கு பச்சைக்கொடி காட்டினர். பின்னர் இரு குடும்பத்தினரும் ஒன்றாக பேசி, அலெக்சாண்டருக்கும், ஜெகதீஸ்வரிக்கும் அடுத்த மாதம்(செப்டம்பர்) 2-ந்தேதி மயிலம் முருகன் கோவிலில் திருமணம் செய்து வைப்பது என்றும், அன்றைய தினம் திண்டிவனத்தில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் திருமண வரவேற்பு நடத்தவும் முடிவு செய்தனர். இதையடுத்து இருவீட்டாரும் திருமண அழைப்பிதழ் அச்சடிப்பது உள்ளிட்ட திருமண வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த தெய்வமணி நேற்று காலை திடீரென உயிரிழந்தார். அடுத்த மாதம் அலெக்சாண்டருக்கு திருமணம் நடக்க இருந்த நிலையில் தெய்வமணி உயிரிழந்தது அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. தந்தையின் மீது அதீத பாசம் கொண்ட அலெக்சாண்டர் தந்தை உடல் முன்பு தனது காதலியை கரம் பிடிக்க முடிவு செய்து உறவினர்களிடம் தெரிவித்தார்.

இதையடுத்து அவரது உறவினர்கள் குணமங்கலத்தில் உள்ள ஜெகதீஸ்வரி மற்றும் அவரது பெற்றோரிடம் தெய்வமணி உயிரிழந்தது பற்றியும், அவரது உடல் முன்பு ஜெகதீஸ்வரியை அலெக்சாண்டர் திருமணம் செய்து கொள்ள விரும்புவது பற்றியும் கூறினர். இதற்கு ஜெகதீஸ்வரி குடும்பத்தினரும் சம்மதம் தெரிவித்தனர்.

இதையடுத்து ஜெகதீஸ்வரி மற்றும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் சிங்கனூருக்கு வந்தனர். பின்னர் தெய்வமணியின் கைகளில் தாலியை வைத்து ஆசிர்வாதம் பெற்ற அலெக்சாண்டர், ஜெகதீஸ்வரியின் கழுத்தில் கட்டினார். தாலி கட்டும்போது அலெக்சாண்டர் கதறி அழுதது அங்கு கூடியிருந்த உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியது. தந்தை இறந்த பிறகும் அவரது உடலிடம் ஆசிர்வாதம் பெற்று காதலியை ஆசிரியர் திருமணம் செய்த சம்பவம் காண்போரை நெகிழ்ச்சியடைய செய்தது.

Next Story