புதிய கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்
புதிய கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடலூர் மற்றும் பி.முட்லூரில் கல்லூரி மாணவ- மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புவனகிரி,
புவனகிரி அருகே உள்ள பி.முட்லூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று காலை 9.30 மணிக்கு மாணவர்கள் வழக்கம் போல் கல்லூரிக்கு வந்தனர்.
இந்த நிலையில் 10 மணி அளவில் அனைத்து பிரிவு மாணவ- மாணவிகளும் புதிய கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வளாகத்தில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் புதிய கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
இதற்கிடையே மதியம் 12 மணியளவில் கல்லூரி முதல்வர் சாந்தி, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், உங்களது கோரிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் தமிழக அரசிடம் தெரிவிப்பதாக கூறினார். இதனை ஏற்றுக்கொண்ட மாணவ- மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் கல்லூரி வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதேபோல் புதிய கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று கடலூர் செம்மண்டலம் தனியார் கல்லூரியில் இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வளாகத்தில் ஒன்று திரண்டனர். பின்னர் அனைவரும் கல்லூரி நுழைவு வாசல் அருகில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
இதில் மாநில நிர்வாகி செம்மலர், மாவட்ட நிர்வாகி நந்தினி ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினர். முன்னதாக அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங் களை எழுப்பினர். இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் அமைதியாக கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story