சிவகங்கை மாவட்டத்தில் வரி-கட்டணமாக ரூ.66 கோடி வசூல்; வட்டார போக்குவரத்து அதிகாரி தகவல்


சிவகங்கை மாவட்டத்தில் வரி-கட்டணமாக ரூ.66 கோடி வசூல்; வட்டார போக்குவரத்து அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 11 Aug 2019 4:30 AM IST (Updated: 11 Aug 2019 12:27 AM IST)
t-max-icont-min-icon

வரி மற்றும் கட்டணமாக ரூ.65 கோடியே 98 லட்சத்து 46 ஆயிரம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக வட்டார போக்குவரத்து அதிகாரி தெரிவித்துள்ளார்.

சிவகங்கை,

சிவகங்கையில் வட்டார போக்குவரத்து அதிகாரி கல்யாண்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சிவகங்கை மாவட்டத்தில் வட்டார போக்குவரத்து துறை சார்பில் 2018-19-ம் ஆண்டிற்கு வரி மற்றும் கட்டணமாக ரூ.65 கோடியே 98 லட்சத்து 46 ஆயிரம் வசூல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் கடந்த ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட வாகன சோதனையின் மூலம் மொத்தம் 3,149 வாகன உரிமையாளர்களிடமிருந்து அபராதமாக ரூ.86 லட்சத்து 68 ஆயிரத்து 399 வசூலிக்கப்பட்டது. இதில் 381 ஆம்னி பஸ்களிடமிருந்து ரூ.10 லட்த்து 90 ஆயிரத்து 190-ம், 98 பள்ளி வாகனங்களிடமிருந்து ரூ.97 ஆயிரத்து 300-ம் வசூலிக்கப்பட்டது.

இது தவிர ஆட்டோ மற்றும் வாகன உரிமையாளர்களிடமிருந்து ரூ.61 ஆயிரத்து 800 வசூலிக்கப்பட்டது. மேலும் சாலை விதிகளை மீறியதாக கடந்த ஓராண்டில் 1,882 வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டுள்ளது. சாலை விதிமீறல்களுக்காக சென்ற ஆண்டில் 15 ஆயிரத்து 23 ஓட்டுனர் உரிமங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் சாலை பாதுகாப்பு வார விழா நிகழ்ச்சி நடத்தப்பட்டு இருசக்கர வாகன ஓட்டுனர்களுக்கு தலைக் கவசம் இலவசமாக வழங்கப்பட்டதோடு, விபத்து இல்லாமல் வாகனம் இயக்கிய ஓட்டுனர்களுக்கு கேடயங்கள் வழங்கப்பட்டுள்ளன. அலுவலகத்தின் வெளிப்படை தன்மையினை மேம்படுத்தும் வகையில் அலுவலகம் மற்றும் ஓட்டுனர் தேர்வு தளத்தில் கண்காணிப்பு கேமரா விரைவில் பொருத்தப்பட உள்ளது.

சாலை பாதுகாப்பு தொடர்பாக தலைக்கவசம் பேரணிகள் நடத்துதல், தலைக்கவசம் அணிந்து வருபவர்களுக்கு பரிசுகள் வழங்குதல், அடிக்கடி விபத்து நடைபெறும் இடங்களில் வாகன தணிக்கைகள் செய்தல் உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிவகங்கை வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் கட்டிட பராமரிப்பு பணிகளுக்காக ரூ.11 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கப்பட உள்ளன.

மேலும் வாகன புகை பரிசோதனை மையங்கள் கணினி மயமாக்கப்பட்டு வாகனங்களுக்கு புகை சான்று வழங்கப்பட்டு அந்த விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் வாகன இன்சூரன்ஸ் சான்றுகளின் விவரம் சம்பந்தப்பட்ட நிறுவனங்களால் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் அலுவலக சேவைகளுக்கு வெளிநபர்களை நாடாமல் நேரடியாக அலுவலக பணியாளர்களிடம் தொடர்பு கொண்டு தேவைப்படும் விவரங்களை கேட்டு பயனடையலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story