ராமேசுவரம் கோவிலில் வறண்டு வரும் தீர்த்த கிணறுகள்


ராமேசுவரம் கோவிலில் வறண்டு வரும் தீர்த்த கிணறுகள்
x
தினத்தந்தி 10 Aug 2019 11:15 PM GMT (Updated: 10 Aug 2019 7:54 PM GMT)

ராமேசுவரம் கோவிலில் உள்ள பல தீர்த்த கிணறுகள் வறண்டு வருகின்றன.

ராமேசுவரம்,

ராமேசுவரம் கோவிலுக்கு தினமும் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.கோவிலில் பக்தர்கள் தீர்த்தமாட 22 தீர்த்த கிணறுகள் உள்ளன. தீர்த்த கிணறுகளில் நீராடினால் தோஷங்களும்,பாவங்களும் நிவர்த்தியாகும் என்று கூறப்படுகிறது.

இவ்வாறு கோவிலின் உள்ளே மகாலட்சுமி, சாவித்திரி, காயத்ரி, சரசுவதி, சக்கரதீர்த்தம், சேது மாதவ, நள,நீல,கவய, கவாட்ச, கெந்தமாதன, பிரம்மஹத்திவிமோசன, சூரிய, சந்திர, சாத்யாமிர்த, சிவ, சர்வ, சங்கு, கயா, கங்கை, யமுனா, கோடி தீர்த்தம் என 22 தீர்த்த கிணறுகள் அமைந்துள்ளன. இந்த தீர்த்த கிணறுகள் அனைத்துமே இயற்கையான ஊற்றாகவே அமைந்திருப்பதால் நீரானது ஊறிக் கொண்டே இருப்பதோடு தண்ணீர் வற்றாமல் காட்சியளிக்கும்.

இந்நிலையில் ராமேசுவரம் பகுதியில் போதிய மழைபெய்யாததால் ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன் பகுதியில் உள்ள ஏராளமான வீடுகளின் கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.மேலும் எப்போதும் வற்றாமல் காட்சியளிக்கும் ராமேசுவரம் கோவிலில் உள்ள பல தீர்த்த கிணறுகள் வறண்டு வருகின்றன.இதில் கங்கா,கெந்தமாதன, யமுனா, சாத்யமிர்த தீர்த்த கிணறுகள் உள்ளிட்ட தீர்த்த கிணறுகளில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்டதுடன் அடிப்பகுதியில் உள்ள மணல், பாறை, கற்கள் வெளியே தெரிகின்றன. பக்தர்கள் தீர்த்த கிணற்றில் வீசி செல்லும் சில்லரை காசுகளும் வெளியே தெரிகின்றன. அதிலும் 20-வது தீர்த்தமான கங்கை தீர்த்தத்தில் அதிக அளவில் தண்ணீர் வற்றி உள்ளது.

இந்நிலையில் ராமேசுவரம் கோவில் நடை நேற்று அடைக்கப்பட்டதால் தீர்த்த கிணறுகளை நேற்று அகில இந்திய யாத்திர பணியாளர்சங்கத்தின் தலைவர் பாஸ்கரன் தலைமையில் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஏராளமானோர் அனைத்து தீர்த்த கிணறுகளிலும் இறங்கி கிணற்றில் கிடந்த கற்கள்,பாட்டில் உள்ளிட்ட குப்பைகளை அகற்றிதூர்வாரும் பணியில் ஈடுபட்டனர். ராமேசுவரம் கோவிலில் தீர்த்த கிணறுகள் பல வருடங்களாக தூர்வாரப்படவில்லை. எனவே காசிக்கு நிகராக விளங்கும் சிறப்பு பெற்ற ராமேசுவரம் கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளையும் முழுமையாக தூர்வார உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story