விஷம் கொடுத்து கொன்றுவிட்டதாக மகள் புகார்: முதியவரின் பிணத்தை தோண்டி எடுத்து போலீசார் விசாரணை


விஷம் கொடுத்து கொன்றுவிட்டதாக மகள் புகார்: முதியவரின் பிணத்தை தோண்டி எடுத்து போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 11 Aug 2019 4:30 AM IST (Updated: 11 Aug 2019 1:32 AM IST)
t-max-icont-min-icon

நாமகிரிப்பேட்டை அருகே தனது தந்தையை விஷம் கொடுத்து கொன்றுவிட்டதாக மகள் கொடுத்த புகாரின் பேரில், முதியவரின் பிணத்தை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யப்பட்டதுடன், போலீசார் விசாரணை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ராசிபுரம்,

ராசிபுரம் தாலுகா நாமகிரிப்பேட்டை அருகேயுள்ள நாரைக்கிணறு குறவர் தெருவை சேர்ந்தவர் தனபால் (வயது 70). இவருடைய மனைவி கனகாம்பாள் (60). இவர்களுக்கு வெங்கடேஷ் (37) என்ற மகனும், செல்வி (42), செல்லம்மாள் (39) என்ற 2 மகள்களும் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. தனபால் மற்றும் கனகாம்பாள் மகன் வெங்கடேசுடன் இருந்து வந்துள்ளனர்.

தனபாலுக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்டது. கடந்த 6-ந் தேதி தனபால் பரிதாபமாக இறந்தார். பின்னர் அன்று மாலையே நாரைக்கிணறு பகுதியில் உள்ள இடுகாட்டில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இந்தநிலையில் கடந்த 8-ந் தேதி ஆயில்பட்டி போலீஸ் நிலையத்தில் செல்வி ஒரு புகார் கொடுத்தார். அதில், தனது தந்தையை தம்பி வெங்கடேசின் மனைவி ராஜம்மாள் மற்றும் அவருடைய தம்பிகள் உள்பட 7 பேர் சேர்ந்து மதுவில் விஷத்தை கலந்து கொடுத்து கொன்று இருக்கலாம் என்றும், அவரது சாவில் சந்தேகம் இருப்பதாகவும் கூறியிருந்தார்.

இதைத்தொடர்ந்து தனபாலின் சாவை சந்தேக மரணம் என போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். மேலும் இதுகுறித்து பிரேத பரிசோதனை நடத்தவும், பிரேதத்தை தோண்டி எடுக்கவும் ராசிபுரம் தாசில்தாருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர். பின்னர் நேற்று நாரைக்கிணறு இடுகாட்டுக்கு, ராசிபுரம் தாசில்தார் பாஸ்கரன், பேளுக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன், ஆயில்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திலகவதி, முள்ளுக்குறிச்சி வருவாய் ஆய்வாளர் ஆனந்தி, நாரைக்கிணறு கிராம நிர்வாக அலுவலர் பிருந்தா ஆகியோர் வந்தனர். அங்கு அவர்கள் முன்னிலையில் புதைக்கப்பட்ட தனபாலின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது.

அப்போது புகார் அளித்த செல்வி மற்றும் அவரது கணவர் நடராஜ் உடன் இருந்தனர். மகன் வெங்கடேசன் மற்றும் இன்னொரு மகள் செல்லம்மாள் ஆகியோர் வரவில்லை. பிணத்தை தோண்டி எடுத்த பிறகு சேலம் அரசு ஆஸ்பத்திரி டாக்டர் கோகுலரமணன் அதே இடத்தில் பிரேத பரிசோதனை நடத்தினார்.

பின்னர் இறந்த தனபாலின் சில உடற் பாகங்களை அவர் ஆய்வுக்காக எடுத்து சென்றார். பிரேத பரிசோதனையின் முடிவு விவரம் தெரிந்த பிறகுதான் தனபால் விஷம் கொடுத்து கொல்லப்பட்டாரா? அல்லது இயற்கையாகவே இறந்தாரா? போன்ற விவரங்கள் தெரியவரும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். இறந்த முதியவர் தனபாலின் உடல் தோண்டி எடுக்கப்பட்டதுடன், போலீசார் விசாரணை நடத்திய சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story