தடுப்பணை இல்லாததால் கோவையில் உற்பத்தியாகி வீணாக கேரளாவிற்கு செல்லும் மஞ்சிப்பள்ளம் ஆற்றுநீர்


தடுப்பணை இல்லாததால் கோவையில் உற்பத்தியாகி வீணாக கேரளாவிற்கு செல்லும் மஞ்சிப்பள்ளம் ஆற்றுநீர்
x
தினத்தந்தி 11 Aug 2019 3:45 AM IST (Updated: 11 Aug 2019 1:47 AM IST)
t-max-icont-min-icon

தடுப்பணை இல்லாததால், கோவையில் உற்பத்தியாகும் மஞ்சிப்பள்ளம் ஆற்றுநீர் கேரளாவிற்கு வீணாக செல்கிறது.

போத்தனூர், 

தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளதை தொடர்ந்து, கேரள மாநிலம் மற்றும் அதை ஒட்டி உள்ள தமிழக எல்லைப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. கோவையில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர்மழையால் நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் முக்கிய நீர்நிலைகள் அனைத்தும் நிறைந்து வருகிறது. இந்தநிலையில் கோவை அறிவொளி நகரில் உருவாகி கேரளா செல்லும் மஞ்சிப்பள்ளம் ஆறு மதுக்கரை, பாலத்துறை, வேலந்தாவளம் வழியாக கேரளா செல்கிறது.இந்த ஆற்றின் குறுக்கே உள்ள தடுப்பணைகள் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே உடைந்துள்ளன.

இதனால் தற்போது தொடர்மழை பெய்தும் தண்ணீர் தேக்கி வைக்க முடியாமல் கோவை அறிவொளி நகர் பகுதியில் உற்பத்தியாகும் மஞ்சிப்பள்ளம் மொத்த ஆற்று நீரும் வீணாக கேரளாவிற்கு செல்கிறது. இதனால் மதுக்கரை சுற்றுவட்டார விவசாயிகளின் நீர் ஆதாரம் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இதுகுறித்து ம.தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் ஈஸ்வரன் கூறுகையில், இந்த பிரச்சினை தொடர்பாக பலமுறை மாவட்ட நிர்வாகம் மற்றும் முதல்-அமைச்சர் தனிப்பிரிவுக்கு புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. உடனடியாக இந்த ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.

இந்தநிலையில் கோவை சாவடிபுதூர் அருகே உருவாகும் உப்புக்கண்டி ஆற்றில் கடந்த 15 ஆண்டுகளுக்கு பின் தற்போது நீர்வரத்து ஏற்பட்டு உள்ளது. சாவடிபுதூர் அருகே உள்ள மலைகளில் உருவாகும் இந்த ஆற்றுநீர் நேராக விவசாய நிலங்களை கடந்து வாளையார் அணையை சென்றடையும். இந்நிலையில் நேற்று அதிகாலையில் சாவடிபுதூர் வாழப்படுகு என்ற இடத்தில் அய்யாசாமி கோவில் அருகே திடீரென சுமார் 30 அடி ஆழத்திற்கு பள்ளம் உருவாகி ஆற்று நீர் முழுவதும் நிலத்திற்குள் செல்கிறது.

திடீரென உருவான பள்ளம் மற்றும் ஆற்று நீர் முழுவதும் நிலத்திற்கு அடியே செல்வதை அப்பகுதியை சுற்றி உள்ள கிராம மக்கள் சென்று அதிசயமாக பார்த்து வருகின்றனர். இதையடுத்து அங்கு வந்த க.க.சாவடி போலீசார் அங்கு எச்சரிக்கை பலகை வைத்து, பள்ளத்தின் அருகே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தி வருகின்றனர்.

கோவையை அடுத்த செட்டிபாளையம் ஓராட்டு குப்பை அருகே உள்ள பெருமாள் கோவில் பின்புறம் சுமார் 100 மீட்டர் தூரத்தில் ஈஸ்வரி என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது. இந்த வீட்டின் அருகே வியாழக்கிழமை இரவு 2 மணியளவில் கட்டிடம் இடிவது போல் சத்தம் கேட்டது. இதையடுத்து ஈஸ்வரி வீட்டில் இருந்தவர்கள் வெளியே சென்று பார்த்த போது சுமார் 20 அடி ஆழத்தில் சுரங்கம் போன்ற குழி ஒன்று உருவாகி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து மறுநாள் காலை அப்பகுதியை சேர்ந்த சிலர் கயிறு கட்டி உள்ளே சென்று பார்த்த போது நீண்ட சுரங்கம் செல்வது போல தெரிந்ததாக தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து செட்டிபாளையம் கிராம நிர்வாகம் அலுவலர், செட்டிபாளையம் போலீசார் அங்கு சென்று ஆய்வு செய்தனர். மேலும் கிணத்துக்கடவு எம்.எல்.ஏ. எட்டிமடை சண்முகம் நேரில் ஆய்வு மேற்கொண்டார். செட்டிபாளையம் குடியிருப்பு அருகே ஏற்பட்ட சுரங்கத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பள்ளத்தின் அருகே யாரும் செல்லாத வகையில் குச்சிகளால் மூடி வைத்துள்ளனர்.

Next Story