படகு இல்லத்தில் சவாரி நிறுத்தம்: பைக்காரா அணையில் இருந்து தண்ணீர் திறப்பு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை


படகு இல்லத்தில் சவாரி நிறுத்தம்: பைக்காரா அணையில் இருந்து தண்ணீர் திறப்பு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
x
தினத்தந்தி 11 Aug 2019 4:00 AM IST (Updated: 11 Aug 2019 1:47 AM IST)
t-max-icont-min-icon

பைக்காரா அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது. அடர்ந்த வனப்பகுதிகள், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் அதிகபட்ச மழை பதிவாகி வருகிறது. இதனால் தண்ணீர் கரைபுரண்டு ஓடி வனப்பகுதியையொட்டி உள்ள அணைகளில் சேகரமாகிறது. காட்டாற்று வெள்ளம் வந்து கொண்டு இருப்பதால், அணைகளின் நீர்மட்டம் கிடு, கிடு என உயர்ந்து வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு மஞ்சூர் அருகே உள்ள குந்தா அணை நிரம்பியதால், அணையில் இருந்து வினாடிக்கு 2600 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. தற்போது 500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

ஊட்டி அருகே உள்ள பைக்காரா அணை 100 அடி கொள்ளளவு கொண்டது. இந்த அணையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 40 அடிக்கு மட்டுமே தண்ணீர் இருந்தது. கடந்த 3 நாட்களாக பெய்த தொடர் மழையால் அணையின் நீர்மட்டம் 93 அடியாக வேகமாக உயர்ந்தது. அதனால் அணையின் பாதுகாப்பு கருதி தண்ணீர் நேற்று காலை திறந்து விடப்பட்டது. அணையில் இருந்து வினாடிக்கு 250 கனஅடி தண்ணீர் 3 மதகுகள் வழியாக வெளியேறி கொண்டு இருக்கிறது. தண்ணீர் திறந்து விடப்பட்டதால் பைக்காரா நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி அளிக்கப்படுவது இல்லை.

பைக்காரா அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் மாயார் ஆறு வழியாக தெங்குமரஹாடா பகுதியில் உள்ள பவானி ஆற்றில் கலக்கிறது. இதையடுத்து கிளன்மார்கன், மாயார், மசினகுடி மற்றும் தெங்குமரஹாடா பகுதிகளில் கரையோரத்தில் வசிப்பவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா விடுத்து உள்ளார். ஒலிபெருக்கி மூலம் ஆற்று பகுதியில் மீன் பிடிக்கவோ, துணி துவைக்கவோ செல்லக்கூடாது. அங்கு வேடிக்கை பார்க்கும் செயலில் ஈடுபடக்கூடாது. ஆற்றை கடக்கும் முயற்சியில் ஈடுபடக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

முக்கூறுத்தி, கிளன்மார்கன், கெத்தை, எமரால்டு, அவலாஞ்சி, அப்பர்பவானி, போர்த்திமந்து, மாயார் போன்ற மின்வாரிய அணைகளில் நீர்மட்டம் கிடு, கிடு என உயர்ந்து நிரம்பி வருகின்றன. கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை சமயத்தில் ஜூலை மாதமே பல அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பைக்காரா படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் நடந்து செல்லும் நடைபாதை படிக்கட்டு மேல்பகுதியில் தண்ணீர் நிரம்பி உள்ளது. நேற்று மழை பெய்து வந்ததால் மோட்டார் படகு, அதிவேக படகு சவாரி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. மழை விட்ட பின்னர் மோட்டார் படகுகள் மட்டும் இயக்கப்பட்டன. அங்கு தண்ணீர் அதிகமாக காணப்படுவதால் சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கின்றனர்.

Next Story