ஆரல்வாய்மொழி அருகே வனத்துறை அதிரடி நடவடிக்கை முயல்களை வேட்டையாடிய 3 பேர் பிடிபட்டனர்


ஆரல்வாய்மொழி அருகே வனத்துறை அதிரடி நடவடிக்கை முயல்களை வேட்டையாடிய 3 பேர் பிடிபட்டனர்
x
தினத்தந்தி 10 Aug 2019 11:00 PM GMT (Updated: 10 Aug 2019 9:06 PM GMT)

ஆரல்வாய்மொழி அருகே முயல்களை வேட்டையாடிய 3 பேர் பிடிபட்டனர். மேலும் வேட்டைக்கு பயன்படுத்திய 9 நாய்களையும் பறிமுதல் செய்து வனத்துறையினர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஆரல்வாய்மொழி,

ஆரல்வாய்மொழி அருகே குமாரபுரம் பகுதியில் வேட்டை நாய்களை வைத்து காட்டு முயல்களை சிலர் வேட்டையாடுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து குமரி மாவட்ட வன அதிகாரி ஆனந்த் உத்தரவின்பேரில், பூதப்பாண்டி வன அலுவலர் மற்றும் வன உயிரின காப்பாளர் திலீபன் அறிவுரையின் பேரில் வனவர் புஷ்பராஜா, வனக்காப்பாளர் துரைராஜ் மற்றும் வேட்டைத்தடுப்பு காவலர்கள் இந்திரன், தனிஷ், சபரி, ஜெகன், ராஜகோபாலன் ஆகியோர் ஆரல்வாய்மொழி வனப்பகுதியில் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு சிலர் வேட்டைநாய்களுடன் முயல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் வனத்துறையினரை பார்த்ததும் சிதறி ஓடினர். உடனே வனத்துறையினரும் துரத்திச் சென்றனர். இதில் 3 பேரை விரட்டி பிடித்தனர். மேலும் அவர்களிடம் இருந்து வேட்டையாட பயன்படுத்திய 2 நாய்களும், இறந்த நிலையில் 2 காட்டு முயல்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

ரூ.30 ஆயிரம் அபராதம்

பின்னர் பிடிபட்ட 3 பேரையும் நாகர்கோவில் வடசேரியில் உள்ள வனத்துறை அலுவலகத்துக்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர். இதில், நெல்லை மாவட்டம் ஆவரைக்குளம் பகுதியை சேர்ந்த இந்திரன் (வயது 49), ராமகிருஷ்ணன்(26), கேசவன்(29) என்பது தெரிய வந்தது. இதையடுத்து மாவட்ட வனத்துறை அதிகாரி ஆனந்த் உத்தரவின்பேரில் 3 பேருக்கும் காட்டு முயலை வேட்டையாடிய குற்றத்துக்காக வன உயிரின பாதுகாப்பு சட்டப்படி தலா ரூ.10 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் தப்பியோடியவர்கள் பயன்படுத்திய 7 வேட்டை நாய்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த நாய்களை வேட்டைக்கு பழக்கி, பயன்படுத்திய காரணத்தாலும், மீண்டும் அவை வேட்டைக்கு பயன்படுத்தப்படும் என்ற காரணத்தாலும் பறிமுதல் செய்யப்பட்ட 9 நாய்களையும் ‘புளு கிராஸ்‘ அமைப்பினரிடம் ஒப்படைக்க வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

Next Story