பெங்களூருவில் கனமழை: 182 இடங்களில் வெள்ள அபாயம் 80 பகுதிகளுக்கு ‘ரெட் அலார்ட்’
பெங்களூருவில் கனமழை பெய்யும் நிலையில் 182 இடங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. மேலும் 80 பகுதிகளுக்கு நகர வளர்ச்சி துறை சார்பில் ‘ரெட் அலார்ட்’ எச்சரிக்கை விடுவிக்கப்பட்டு உள்ளது.
பெங்களூரு,
வடகர்நாடக மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை மற்றும் மராட்டியத்தில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர் காரணமாக பெலகாவி, பாகல்கோட்டை, கதக், யாதகிரி உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. இந்த நிலையில் பெங்களூருவில் மழை பெய்ய தொடங்கி உள்ளது. இதனால் வெள்ள அபாய எச்சரிக்கையில் இருந்து தப்பிக்க முன்னெச்சரிக்கை பணியை பெங்களூரு மாநகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது.
இதுதொடர்பாக மேயர் கங்காம்பிகே பெங்களூரு மாநகராட்சியின் 8 மண்டல அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது பெங்களூரு நகரில் 80 மில்லிமீட்டர் முதல் 120 மில்லிமீட்டர் வரை மழை பெய்யும் பட்சத்தில் பெங்களூரு நகரை வெள்ளம் சூழ வாய்ப்பு இல்லை என்பதும், அதற்குமேல் மழை பெய்யும் பட்சத்தில் 182 இடங்கள் வெள்ளத்தின் பிடியில் சிக்கும் அபாயம் உள்ளது என்பதும் தெரியவந்துள்ளது. மழை நீர் தேங்குவதும், கால்வாய்களில் இருந்து கழிவுநீர் நிரம்பி வழிவதும் தான் வெள்ளத்துக்கு காரணமாக இருக்கும் என்பதும் தெரியவந்துள்ளது.
சென்சார்கள்
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘பெங்களூரு நகரில் வெள்ளம் சூழாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. கர்நாடக மாநில தேசிய பேரிடர் கண்காணிப்பு மையத்துடன் சேர்ந்து வெள்ளம் ஏற்படும் 18 கால்வாய் பகுதிகளில் சென்சார்கள் பொருத்தி உள்ளோம். குறிப்பிட்ட மட்டத்துக்கு அதிகமாக கழிவுநீரும், மழை நீரும் சேர்ந்து வெளியேறும்பட்சத்தில் அந்த சென்சார்கள் மூலம் எச்சரிக்கை கிடைக்கும். இதன்மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது. இன்னும் 10 இடங்களில் விரைவில் சென்சார்கள் பொருத்த உள்ளோம்’ என்றார்.
இதுபற்றி மேயர் கங்காம்பிகே கூறுகையில், ‘பெங்களூரு நகரில் உள்ள 9 கட்டுப்பாட்டு அறைகளுடன் கூடுதலாக தற்காலிக கட்டுபாட்டு அறைகள் தொடங்கப்பட உள்ளது. இந்த அறைகளில் வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்வதற்கான உபகரணங்கள் இருக்கும். மேலும், பணியாளர்களும் இருப்பார்கள். முறிந்து விழும் மரங்களை வெட்டி அப்புறப்படுத்த 28 குழு அமைக்கப்பட்டுள்ளது’ என்றார்.
வெள்ள அபாய பகுதிகளின் விவரம்
மேலும் பெங்களூரு மாநகராட்சி நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ள பகுதிகளின் விவரம் வருமாறு:-
கிழக்கு மண்டலத்தில் பிராட்வே ரோடு, ஆம்ஸ்ட்ராங் சந்திப்பு, எம்.பி.கார்டன், விவேகானந்தா நகர், ஸ்வீப்பர்ஸ் காலனி, சுப்பயனபாளையா, டிம்பர் லே-அவுட், கல்யாண் நகர் மற்றும் செல்லக்கெரே ஆகிய பகுதிகள் ஆகும். மேற்கு மண்டலத்தில் மந்திரி மால், கோபாலபுரா, கெம்பேகவுடா நகர், கமலாநகர், குட்டஹள்ளி, மல்லேசுவரம் லிங்க் ரோடு, நந்தினி லே-அவுட், யஷ்வந்தபுரம் டி.டி.எம்.சி., என்.ஜி.இ.எப். லே-அவுட், பின்னி மில்ஸ், ராயபுரம், சாம்ராஜ்பேட்டை, சும்மனஹள்ளி, ஜக்கம்மா லே-அவுட் போன்ற பகுதிகள் அடங்கும்.
கோரமங்களா பள்ளத்தாக்கு பிரிவில் பால்ம்குரோவ் ரோடு, வினாயக்நகர் நகர், மிக்கேல் சர்ச் பகுதி, ஆனேபாளையா, கும்பரகுந்தி, ஜே.சி.ரோடு, பைரசந்திரா, சில்க் போர்டு சந்திப்பு, நவோதயா லே-அவுட், ஈஜிபுரா, தாவரகெரே, பி.எம்.டி. லே-அவுட், கோரமங்களா 4-வது பிளாக் ஆகிய பகுதிகள் அடங்கும். தாசரஹள்ளி மண்டலத்தில் ஜனதா காலனி, விக்னேஷ்வரா லே-அவுட், சித்தேஸ்வரா லே-அவுட் குண்டப்பா லே-அவுட், கம்மகொண்டனஹள்ளி, கஸ்துரி லே-அவுட், லட்சுமணா நகர், சிவபுரா, சாம்பவிநகர், பாகலகுண்டே, சொக்கசந்திரா, ஒய்சாலா நகர், சுங்கதகட்டே, ஹெக்கனஹள்ளி பகுதிகள் அடங்கியுள்ளன.
பொம்மனஹள்ளி, ஆர்.ஆர்.நகர் மண்டலம்
மகாதேவபுரா மண்டலத்தில் மகேஷ்வரிநகர், பட்டந்தூர் அக்ரஹாரா, வர்த்தூர் கோடி, தொட்டனகுந்தி, மாரத்தஹள்ளி, ராமமூர்த்திநகர், கவுடனஹள்ளி, தேவ சந்திரா, என்.ஆர்.ஐ. லே-அவுட், அம்பேத்கர் குடிசை பகுதி, விஜயநகரில் உள்ள 15 லே-அவுட் பகுதிகள் அடங்கும்.
பொம்மனஹள்ளி மண்டலத்தில் எச்.எஸ்.ஆர் லே-அவுட், ஒங்கசந்திரா, டாலர்ஸ் காலனி, பிலிகேஹள்ளி, ஆக்ஸ்போர்டு கல்லூரி, உளிமாவு மற்றும் உளிமாவில் உள்ள 7 லே-அவுட்கள் ஆகிய பகுதிகள் அடங்கும்.
ஆர்.ஆர்.நகர் மண்டலத்தில் பங்காரப்பா நகர், பண்டேமடம், துபாசிபாளையா, குளோபல் கிராமம், அஞ்சனப்பா லே-அவுட், கெம்பேகவுடா நகர், ஹீரோஹள்ளி, கெஞ்சனஹள்ளி, ரகுவனஹள்ளி, அஞ்சேபாளையா, குருதுட் நகர், சங்கரப்பா லே-அவுட், மாதேஸ்வரா நகர் மற்றும் உல்லால் ஆகிய பகுதிகள் உள்ளடங்கி இருக்கிறது. எலகங்கா மண்டலத்தில் கரியப்பனபாளையா, மான்யதா டெக் பார்க், டாடா நகர், திண்ட்லுகெரே, தொட்டபொம்மசந்திரா ஏரி, யோகேஷ்வரா நகரில் உள்ள 5 பகுதிகள் ஆகியவற்றுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
80 பகுதிகளுக்கு ‘ரெட் அலார்ட்’
இதுதவிர ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. கனமழை பெய்யும் நிலையில் பெங்களூரு நகரில் சில இடங்கள் வெள்ளத்தில் தத்தளிக்க வாய்ப்பு உள்ளது. இதனால் பெங்களூரு நகரில் உள்ள 80 பகுதிகளுக்கு ‘ரெட் அலார்ட்’ எச்சரிக்கையை நகர வளர்ச்சி துறை விடுத்துள்ளது. இதில் மந்திரி மால், மான்யதா டெக்பார்க் போன்ற முக்கிய இடங்கள் அடங்கும்.
Related Tags :
Next Story