பரமக்குடி பகுதியில் குடிமராமத்து பணி: கண்மாய்களில் மணல் கொள்ளை


பரமக்குடி பகுதியில் குடிமராமத்து பணி: கண்மாய்களில் மணல் கொள்ளை
x
தினத்தந்தி 12 Aug 2019 4:00 AM IST (Updated: 11 Aug 2019 11:14 PM IST)
t-max-icont-min-icon

பரமக்குடி பகுதியில் மழை பெய்யாததால் வறண்டு கிடக்கும் கண்மாய்களில் குடிமராமத்து பணி என்ற பெயரில் மணல் கொள்ளை அதிகரித்துள்ளது.

பரமக்குடி,

பரமக்குடி பகுதியில் உள்ள விவசாயிகள் ஆடி மாதம் பிறந்தது முதல் பல்வேறு கிராமங்களில் விவசாய பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். விவசாய நிலங்களை உழுது விதைப்பதற்காக மழையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஆனால் பருவமழை பெய்யாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். அவ்வாறு மழை பெய்தாலும் மழை நீரை பாதுகாப்பாக சேமித்து விவசாய பணிகளை மேற்கொள்வதற்காக உள்ள கண்மாய்கள், ஊருணிகள், கால்வாய்கள் முறையாக தூர்வாரப்படாமல் அவைகளில் காட்டுகருவேல மரங்கள், செடிகள் வளர்ந்து புதர் மண்டி கிடக்கின்றன. பல கண்மாய்கள் ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சிக்கி காணாமல் போகும் நிலை உருவாகிஉள்ளது. இதில் பரமக்குடி ஒன்றியத்தில் 64 கண்மாய்கள், முதுகுளத்தூர் ஒன்றியத்தில் 32 கண்மாய்கள், நயினார்கோவில் ஒன்றியத்தில் 58 கண்மாய்கள் என பொதுப்பணித் துறை கண்மாய்கள் உள்ளன. இதில் பல கண்மாய்களின் நிலையும் அதே தான்.

மணல் கொள்ளை கும்பல்கள் காட்டுகருவேல மரங்கள் வளர்ந்துள்ள கண்மாய்களை தேர்வு செய்து அவைகளுக்கு பாதை அமைத்து டிப்பர் லாரிகள் மற்றும் டிராக்டர்களில் மணல் அள்ளுகின்றனர். அதேபோல் குடிமராமத்து பணிகள் நடந்து வரும் கண்மாய்களில் உள்ள மணலை அள்ளிச்சென்று வெளியில் விற்பனை செய்கின்றனர். இதுகுறித்து கிராம மக்கள் பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்து வருகின்றனர்.

உடனடியாக அவர்கள் அந்த பகுதிகளுக்கு சென்று சம்பந்தப்பட்டவர்களை கண்டித்து பணிகளை நிறுத்தி வைக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே, மாவட்ட கலெக்டர் இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு குடிமராமத்து பணி நடைபெறும் கண்மாய்களை முறையாக ஆய்வு செய்து குடிமராமத்து பெயரில் நடைபெறும் மணல் கொள்ளையினை முழுமையாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிராம மக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story