கல்வராயன்மலை பகுதியில், மரவள்ளி கிழங்கு அறுவடை பணியில் விவசாயிகள் மும்முரம்


கல்வராயன்மலை பகுதியில், மரவள்ளி கிழங்கு அறுவடை பணியில் விவசாயிகள் மும்முரம்
x
தினத்தந்தி 11 Aug 2019 10:45 PM GMT (Updated: 11 Aug 2019 5:50 PM GMT)

கல்வராயன்மலை பகுதியில் மரவள்ளி கிழங்கு அறுவடை பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

கச்சிராயப்பாளையம்,

கச்சிராயப்பாளையம் அருகே கல்வராயன்மலையில் உள்ள மாவடிபட்டு, ஆரம்பூண்டி, கொட்டத்தூர், சேராப்பட்டு உள்பட பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் ஆயிரத்துக்கும் அதிகமான ஏக்கர் நிலப்பரப்பில் மரவள்ளி கிழங்கு பயிரிட்டனர். தற்போது அவைகள் விளைந்துள்ளதை அடுத்து, அதனை அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து விவசாயி ஒருவர் கூறியதாவது:- அதிக செலவு செய்து மரவள்ளி கிழங்கை பயிரிட்டு பராமரித்து வந்தோம். ஆனால் போதிய மழை இல்லாத காரணத்தால், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விளைச்சல் குறைவாக உள்ளது. இதனால் எங்களுக்கு பெரும் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது. அறுவடை செய்யப்பட்டுள்ள கிழங்குகளை சேலம் மாவட்டம் ஆத்தூர் மற்றும் தலைவாசல் பகுதியில் உள்ள சவ்வரிசி ஆலைகளுக்கு எடுத்து சென்று விற்பனை செய்து வருகிறோம்.

அங்கு சவ்வரிசி மற்றும் சேமியா ஆகியவை தயாரிக்க மரவள்ளிக்கிழங்கு பயன்படுத்தப்படுகிறது. தற்போது ஒரு டன் மரவள்ளி கிழங்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.6 ஆயிரம் வரை விற்பனையாகி வருகிறது.

இது எங்களுக்கு போதுமான விலை இல்லை. மேலும் மரவள்ளி கிழங்குகளை லாரியில் ஏற்றி வெளியூர்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்ய வேண்டியது இருப்பதால் செலவு அதிகரித்து வருகிறது. இதை தவிர்க்க கல்வராயன்மலை பகுதியில் சவ்வரிசி ஆலைகளை தொடங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் உரம், பூச்சி கொல்லி மருந்துகளின் விலையை குறைக்க வேண்டும். அவ்வாறு செய்தால், எங்களுக்கு உற்பத்தி செலவு குறையும். இதன் மூலம் எங்களுக்கு அதிக அளவில் வருமான கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார். 

Next Story