தாளவாடி அருகே மீண்டும் அட்டகாசம்; கிராமத்துக்குள் புகுந்து ஆட்டை கவ்வி சென்ற சிறுத்தைப்புலி, மலைவாழ் மக்கள் அச்சம்


தாளவாடி அருகே மீண்டும் அட்டகாசம்; கிராமத்துக்குள் புகுந்து ஆட்டை கவ்வி சென்ற சிறுத்தைப்புலி, மலைவாழ் மக்கள் அச்சம்
x
தினத்தந்தி 12 Aug 2019 4:00 AM IST (Updated: 12 Aug 2019 12:11 AM IST)
t-max-icont-min-icon

தாளவாடி அருகே மீண்டும் கிராமத்துக்குள் புகுந்த சிறுத்தைப்புலி, மேய்ந்து கொண்டிருந்த ஆட்டை கவ்வி சென்று அட்டகாசம் செய்த சம்பவத்தால் மலைவாழ் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

தாளவாடி,

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சத்தியமங்கலம், பவானிசாகர், தாளவாடி, ஆசனூர், தலமலை, கேர்மாளம் உள்பட 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தக்கு உள்பட்ட வனப்பகுதியில் புலி, சிறுத்தைப்புலி, யானை, காட்டெருமை, மான், செந்நாய் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

இதில் அடர்ந்த வனப்பகுதியில் உள்ள சூசைபுரம் மலைக்கிராமத்தை சேர்ந்தவர் சின்னம்மா (வயது 46). விவசாயி. இவர் 5 மாடுகள், 3 ஆடுகள் வளர்த்து வருகிறார். இவர் வழக்கம்போல் அங்குள்ள மானவாரி நிலங்களில் தன்னுடைய மாடு மற்றும் ஆடுகளை மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் காலை அங்குள்ள மானாவாரி நிலத்தில் தன்னுடைய மாடு மற்றும் ஆடுகளை சின்னம்மா மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். மாலை 5 மணி அளவில் மாடுகளும், ஆடுகளும் அங்கு மேய்ந்து கொண்டிருந்தன. சின்னம்மா ஓரமாக உட்கார்ந்திருந்தார். அப்போது அங்கு திடீரென பாய்ந்து வந்த சிறுத்தைப்புலி ஒன்று மேய்ந்து கொண்டிருந்த ஆட்டை கவ்வி பிடித்தது.

இதை நேரில் கண்டதும் அதிர்ச்சி அடைந்த சின்னம்மா சத்தம் போட்டு கத்தினார். அவருடைய சத்தம் கேட்டு சிறுத்தைப்புலி, அப்படியே ஆட்டை கவ்வியபடி அருகில் உள்ள கல்குவாரி புதருக்குள் கொண்டு சென்று பதுங்கி கொண்டது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு தாளவாடி வனச்சரகத்துக்கு உள்பட்ட மல்குத்திபுரத்தை சேர்ந்த விவசாயியான ஜேக்கப் என்பவரின் 3 ஆடுகளை கடித்து கொன்று உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் உள்ள மலைவாழ் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இதுகுறித்து மலைவாழ் மக்கள் கூறுகையில், ‘தொட்டகாஜனூர், பீம்ராஜ்நகர், சூசைபுரம், மல்குத்திபுரம் பகுதியில் இதுவரை 7 ஆடுகளையும், 5 நாய்களையும் சிறுத்தைப்புலி கொன்று உள்ளது. தொடர்ந்து அட்டகாசம் செய்து வரும் சிறுத்தைப்புலியானது இங்குள்ள கல்குவாரி பகுதியில்தான் சுற்றி வருகிறது. இதுபற்றி வனத்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு விட்டது.

எனவே தொடர்ந்து அட்டகாசம் செய்து வரும் சிறுத்தைப்புலியை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தனர்.

Next Story