மாவட்ட செய்திகள்

கோயம்பேட்டில் பரபரப்பு சம்பவம்: போலீஸ் வாகனத்தில் விஷம் குடித்து கள்ளக்காதல் ஜோடி தற்கொலை + "||" + In the police vehicle Drinking poison Counterfeit couple suicide

கோயம்பேட்டில் பரபரப்பு சம்பவம்: போலீஸ் வாகனத்தில் விஷம் குடித்து கள்ளக்காதல் ஜோடி தற்கொலை

கோயம்பேட்டில் பரபரப்பு சம்பவம்: போலீஸ் வாகனத்தில் விஷம் குடித்து கள்ளக்காதல் ஜோடி தற்கொலை
கோயம்பேட்டில், போலீஸ் வாகனத்தில் விஷம் குடித்து கள்ளக்காதல் ஜோடி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பூந்தமல்லி,

ஈரோடு மாவட்டம் நம்பியூர், புளியம்பட்டியை சேர்ந்தவர் குணசேகரன். இவருடைய மனைவி கவிதாமணி (வயது 32). அதே பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (42). இவர், சொந்தமாக சிறிய அளவில் ஜவுளி நிறுவனம் நடத்தி வந்தார். அங்கு கவிதாமணி வேலை செய்தார்.


இதனால் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, கள்ளக்காதலாக மாறியது. இதையறிந்த இருவீட்டாரும் ஜெயக்குமார், கவிதாமணி இருவரையும் கண்டித்தனர். அதன்பிறகு இருவரும் சந்தித்து பேசுவதில் சிரமம் ஏற்பட்டது.

இதையடுத்து கடந்த மாதம் கவிதாமணி, ஜெயக்குமார் இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர். இருவரும் சென்னைக்கு வந்து, கோயம்பேடு அடுத்த நெற்குன்றம் சிவசக்தி நகரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து கணவன்-மனைவி போல் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். சென்னையில் உள்ள ஒரு துணி நிறுவனத்தில் இருவரும் வேலை செய்து வந்தனர்.

இதற்கிடையில் இருவரும் மாயமானது குறித்து அவர்களின் வீட்டினர் தனித்தனியாக நம்பியூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான இருவரையும் தேடி வந்தனர்.

இந்தநிலையில் இருவரும் நெற்குன்றத்தில் வசிப்பதை அறிந்த அவர்களின் உறவினர்கள் இதுபற்றி நம்பியூர் போலீசாரிடம் தெரிவித்தனர். இதையடுத்து நம்பியூர் போலீசார், நேற்று முன்தினம் இரவு நெற்குன்றம் வந்து அவர்கள் தங்கி இருந்த வீட்டுக்கு சென்றனர்.

அங்கு ஜெயக்குமார் மட்டும் இருந்தார். கவிதாமணி, ஈரோடு சென்றுவிட்டு பஸ்சில் கோயம்பேடு வந்து கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார். இதையடுத்து அவரை கோயம்பேடு பஸ் நிலையம் அழைத்துச்சென்ற போலீசார், கவிதாமணியை அழைத்து வரும்படி கூறினர்.

அதன்படி பஸ்சில் இருந்து இறங்கிய கவிதாமணியை ஜெயக்குமார் அழைத்து வந்தார். இருவரையும் பிடித்த போலீசார், விசாரணைக்காக புளியம்பட்டிக்கு அழைத்து வர தங்கள் வாகனத்தில் ஏற்றினர்.

அப்போது இருவரும் தயாராக மறைத்து வைத்து இருந்த விஷத்தை குடித்து விட்டனர். போலீஸ் வாகனத்திலேயே கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், உடனடியாக இருவரையும் மீட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கவிதாமணி, ஜெயக்குமார் இருவரும் அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர்.

இதுகுறித்து கோயம்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் தற்கொலை செய்த 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து மேலும் விசாரித்து வருகின்றனர்.

இருவரும் ஊரை விட்டு ஓடிவரும்போதே தங்கள் கள்ளக்காதலை பிரித்தால் தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என்று முடிவெடுத்து விஷத்தை தயாராக வைத்து இருந்துள்ளனர். போலீசாரிடம் சிக்கியதும் இருவரும் விஷத்தை குடித்து தற்கொலை செய்துகொண்டது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் கோயம்பேடு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.