தென் பெண்ணை ஆற்றிலிருந்து மணல் கடத்திய 3 மாட்டு வண்டிகள் பறிமுதல் - வாலிபர் கைது


தென் பெண்ணை ஆற்றிலிருந்து மணல் கடத்திய 3 மாட்டு வண்டிகள் பறிமுதல் - வாலிபர் கைது
x
தினத்தந்தி 12 Aug 2019 4:00 AM IST (Updated: 12 Aug 2019 12:46 AM IST)
t-max-icont-min-icon

தென் பெண்ணை ஆற்றில் இருந்து அனுமதியின்றி மணல் அள்ளி கடத்திய 3 மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மணல் கடத்தலில் ஈடுபட்ட ஒரு வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

பாகூர்,

புதுச்சேரி மாநிலத்தில் ஆறுகளில் மணல் அள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் தடையை மீறி திருட்டுத்தனமாக மணல் அள்ளி கடத்தப்பட்டு வருகிறது. அதனை தடுக்க வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். ஆனாலும் மணல் கடத்தல் தொடர்ந்து வருகிறது.

இந்த நிலையில் பாகூர் அருகே சோரியாங்குப்பம் தென்பெண்ணை ஆற்றில் இருந்து மாட்டு வண்டிகள் மூலம் மணல் கடத்தப்படுவதாக பாகூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதைத் தொடர்ந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு குருவிநத்தம் பகுதியில் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பில் ஈடுபட்டனர். நேற்று அதிகாலை அந்த வழியாக ஆற்று மணல் ஏற்றிக்கொண்டு 3 மாட்டு வண்டிகள் வந்தன. போலீசார் அந்த வண்டிகளை மறித்தனர். போலீசாரை பார்த்ததும் மாட்டு வண்டி தொழிலாளர்கள் அதில் இருந்து குதித்து தப்பி ஓடிவிட்டனர்.

அவர்களில் ஒருவரை மட்டும் போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர் சோரியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த ராஜசேகர் (வயது 30) என்பதும், தப்பி ஓடியவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த ராஜாமணி (28) மற்றும் குமணன் (19) என்பதும் தெரிய வந்தது. விசாரணையைத் தொடர்ந்து ராஜ சேகரை போலீசார் கைது செய்தனர். தப்பி ஓடிய மற்ற 2 பேரையும் தேடி வருகிறார் கள். மாட்டு வண்டிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

அதேபோல் காட்டேரிக்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு தேத்தாம்பாக்கம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக 3 மாட்டு வண்டிகளில் மணல் ஏற்றி வந்தவர்கள் போலீசாரை பார்த்ததும் வண்டிகளை நிறுத்தவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தினார்கள். இந்த விசாரணையில் தப்பி ஓடியவர்கள் சந்தைப்புதுக்குப்பத்தை சேர்ந்த சாமிநாதன், புத்துப்பட்டான் மற்றும் காட்டேரிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த பெலிக்ஸ் என்பதும், அவர்கள் அங்குள்ள சங்கராபரணி ஆற்றில் இருந்து திருட்டு தனமாக மணல் அள்ளி கடத்தி வந்ததும் தெரிய வந்தது. தப்பி ஓடிய 3 பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

Next Story