வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று இடம் வழங்க நடவடிக்கை - அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று இடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.
கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையொட்டி நேற்று மாலை தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், கலெக்டர் மலர்விழி ஆகியோர் ஒகேனக்கல்லுக்கு நேரில் சென்று தலவுகொட்டாய், ஊட்டமலை, நாகர்கோவில், மெயின் அருவி உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டு நீர்வரத்தை ஆய்வு செய்தனர். மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அவர்கள் அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.
பின்னர் அமைச்சர் கே.பி.அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
கர்நாடகாவில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் தற்போது ஒகேனக்கல்லுக்கு சுமார் 1 லட்சத்து 75 ஆயிரம் கன அடி வந்து கொண்டுள்ளது. அது இன்று (நேற்று) இரவு 2 லட்சத்து 50 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கும். இந்த தண்ணீர் இன்னும் 6 மணி நேரத்திற்குள் ஒகேனக்கல்லுக்கு வந்து சேர்ந்துவிடும். ஒகேனக்கல்லில் பொதுமக்களுக்கு அதிகபடியான பாதிப்பு ஏற்படவில்லை. ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.
மேலும் ஒகேனக்கல்லுக்கு 2 லட்சம் 50 ஆயிரம் கனஅடி தண்ணீர் வர வாய்ப்பு உள்ளது. மேலும் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. 6 வீடுகள் மட்டும் பாதிப்பு ஏற்படும் நிலையில் உள்ளது. அந்த வீடுகளை சேர்ந்தவர்களை முன்னெச்சரிக்கையாக பெரியார் மண்டபத்தில் தங்கவைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டவர்களுக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தி அவர்களுக்கு பென்னாகரம் வனத்துறை சோதனைச்சாவடி அருகில் மாற்று இடம் வழங்கி, இலவச வீடுகள் கட்டி தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
மேலும் காவிரி ஆற்றில் தண்ணீர் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் கரையோரத்தில் நின்று வேடிக்கை பார்ப்பது, இறங்கி குளிப்பது, செல்பி எடுப்பது ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது அங்கிருக்கும் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு பாதிக்காத வண்ணம் அவர்கள் விருப்பப்பட்ட 100 நாள் வேலை திட்டத்தில் சேர்ந்து பயன் அடையலாம். இதற்கு மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்து வருகிறது.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.
முன்னதாக பாலக்கோடு, பென்னாகரம், நல்லம்பள்ளி மற்றும் தர்மபுரி ஆகிய தாலுகாக்களில் பயனாளிகளுக்கு பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகள் மற்றும் இருசக்கர வாகனம் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாக்களுக்கு மாவட்ட கலெக்டர் மலர்விழி தலைமை தாங்கினார். இந்த விழாக்களில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு 4 தாலுகாக்களை சேர்ந்த 1,433 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 26 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் ரகமத்துல்லாகான், கோவிந்தசாமி எம்.எல்.ஏ., உதவி கலெக்டர் சிவன்அருள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் காளிதாசன், தர்மபுரி மாவட்ட பால்வளத்தலைவர் டி.ஆர்.அன்பழகன், கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் நாகராஜன், தாசில்தார்கள் வெங்கடேஷ்வரன், சதாசிவம், சவுகத்அலி, சுகுமார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story