வல்லநாடு அருகே பயங்கரம்: இடப்பிரச்சினையில் வக்கீல் வெட்டிக்கொலை
வல்லநாடு அருகே இடப்பிரச்சினையில் வக்கீல் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். பேச்சுவார்த்தைக்கு அழைத்து சென்று தீர்த்துக்கட்டிய 3 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள். இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்பட்டதாவது:-
ஸ்ரீவைகுண்டம்,
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள சென்னல்பட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் சண்முகவேல். இவருடைய மகன் வேல்முருகன் (வயது 27), வக்கீல். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த செல்வம் என்பவருக்கும் இடப்பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்தது.
இந்த நிலையில் நேற்று காலையில், இடப்பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்து கொள்ளலாம் என்று கூறி செல்வம் தன் வீட்டிற்கு வேல்முருகனை அழைத்துள்ளார். இதனை நம்பிய வேல்முருகன், செல்வம் வீட்டிற்கு காலை 9.30 மணி அளவில் சென்றார். ஆனால் அதன்பின்னர் அவர் அந்த வீட்டில் இருந்து வெளியே வரவில்லை.
இந்த நிலையில் முறப்பநாடு போலீசாருக்கு வேல்முருகன் கொலை செய்யப்பட்டதாக தகவல் கிடைத்தது. இதனால் போலீசார் சென்னல்பட்டி பகுதி முழுவதும் சோதனை செய்தனர். ஆனால் வேல்முருகன் எங்கும் கிடைக்கவில்லை.
கடைசியாக செல்வம் வீட்டிற்கு போலீசார் வந்தனர். அங்கு அவரது வீடு பூட்டிக்கிடந்தது. கதவை தட்டிப்பார்த்தும் யாரும் திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டில் வேல்முருகன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் பாலகோபாலன் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டார். பின்னர் போலீசார் வேல்முருகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். முதற்கட்ட விசாரணையில், இடப்பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வேல்முருகனை, செல்வம் தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். அப்போது, அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த செல்வம், அதே ஊரைச் சேர்ந்த அருள்ராஜ், கால்வாய் பகுதியைச் சேர்ந்த மகேஷ் ஆகியோர் சேர்ந்து அரிவாளால் வேல்முருகனை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் உடலில் பல்வேறு இடங்களில் வெட்டுக்காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிர் இழந்தார். பின்னர் செல்வம் உள்பட 3 பேரும் வீட்டின் கதவை பூட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்று இருக்கலாம் என்று தெரியவந்தது.
தப்பி ஓடிய செல்வம், அருள்ராஜ், மகேஷ் ஆகிய 3 பேரையும் போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த பகுதியில் பிரச்சினை ஏதும் ஏற்படாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். வல்லநாடு அருகே இடப்பிரச்சினையில் வக்கீல் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story