நாமக்கல்லில் பரபரப்பு, லாரி பட்டறை அதிபர் குத்திக்கொலை - தொழிலாளி கைது
நாமக்கல்லில் டேங்கர் லாரி பட்டறை அதிபர் குத்திக்கொலை செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல்,
நாமக்கல் அருகே உள்ள சின்னமுதலைப்பட்டி செம்பாலிகரடை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 39). இவர் முதலைப்பட்டியில் டேங்கர் லாரிகளுக்கான, டேங்குகளை தயாரிக்கும் பட்டறை நடத்தி வந்தார். நாமக்கல்லில் உள்ள காசியார் தெருவை சேர்ந்த சண்முகம் மகன் மணி (25). வெல்டிங் தொழிலாளி. ரமேஷ் இவருக்கு ரூ.10 ஆயிரம் கடன் வழங்கி உள்ளார். நீண்ட நாட்களாகியும் அவர் ரமேசிடம் கடன் தொகையை திருப்பி வழங்காமல் இருந்துள்ளார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு நாமக்கல் டவுன் சேலம் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையில் ரமேஷ் மது அருந்திவிட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது நாமக்கல்லில் உள்ள பிரபல தியேட்டர் வழியாக வந்த மணியிடம் அவர் பணத்தை திருப்பி கேட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து ஆத்திரமடைந்த மணி தான் மறைத்து வைத்திருந்து கத்தியால் ரமேசை குத்தி உள்ளார். இதில் அதிர்ச்சி அடைந்த ரமேஷ், மணியிடம் இருந்து தப்பித்து ஓடினார். ஆனால் மணி, அவரை விடாமல் ஓட, ஓட விரட்டி சென்று சரமாரியாக கத்தியால் குத்தினார். இதில் படுகாயமடைந்து ரமேஷ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இதையடுத்து மணி, ரமேசின் உடலுக்கு அருகிலேயே ஒன்றும் தெரியாததுபோல் படுத்துக்கொண்டார்.
இதுகுறித்து தகவலறிந்த நாமக்கல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பூபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். பின்னர் அங்கு கிடந்த ரமேசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காகவும், வெட்டும்போது காயமடைந்திருந்ததால் மணியை சிகிச்சைக்காகவும் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மேலும் துணை போலீஸ் சூப்பிரண்டு காந்தி தலைமையிலான போலீசார் மணியிடம் விசாரணை நடத்தினர். இதில், 5 பேர் கொண்ட கும்பல் தங்களை (மணி, ரமேஷ்) கத்தியால் குத்தி தாக்கியதாக கூறி நாடகமாடி உள்ளார். பின்னர் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்திய பிறகுதான் பணத்தகராறு காரணமாக ரமேசை கத்தியால் குத்தியதை அவர் ஒப்புக்கொண்டார்.
பின்னர் மணி, ரமேசை ஓட, ஓட விரட்டி சென்று கத்தியால் குத்திக்கொலை செய்தது தெரியவந்தது. இது அந்த பகுதியில் உள்ள கடை ஒன்றின் சி.சி.டி.வி.கேமராவில் பதிவாகி இருந்தது. இதைத்தொடர்ந்து நேற்று மணியை போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story