பாகலூரில், 2 காட்டு யானைகள் முகாம் - பொதுமக்களுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை
ஓசூர் அருகே பாகலூர் பகுதியில் 2 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வனத்துறையினர் எச்சரிக்கையாக விடுத்துள்ளனர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கெலவரப்பள்ளி அணை பகுதியில், 2 காட்டு யானைகள் கடந்த சில நாட்களாக முகாமிட்டுள்ளன. மேலும் அவைகள் சித்தனபள்ளி, ஜீமங்களம் ஆகிய பகுதிகளில் சுற்றித்திரிகின்றன. இந்த யானைகளை, பேரண்டபள்ளி காட்டுக்கு விரட்டியபோதும், அவை மீண்டும், மீண்டும் கெலவரப்பள்ளி அணை பகுதிக்கே திரும்பி, அங்குள்ள தைலத்தோப்பில் முகாமிட்டன.
இந்நிலையில் நேற்று முன்தினம் 2 யானைகளும் ஓசூர் அடுத்துள்ள பாகலூர் அருகே லிங்காபுரம் பகுதிக்கு இடம் பெயர்ந்து அங்குள்ள விளைநிலத்தில் தஞ்சம் அடைந்தன. நேற்று அந்த 2 காட்டு யானைகளும் பாகலூர் அருகே பெலத்தூர் வழியாக விநாயகபுரம் கிராமத்தை அடைந்து அங்கு தென்பெண்ணை ஆற்றின் அருகில் உள்ள தைலமர தோப்பில் புகுந்தன.
யானைகளின் நடமாட்டத்தை, ஓசூர், ராயக்கோட்டை, சூளகிரி பகுதிகளை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும் அங்கிருந்து யானைகள் எந்த பக்கம் செல்லும் என்பது தெரியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர். 2 யானைகளையும், அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டுவது, வனத்துறையினருக்கு பெரிய சவாலாக உள்ளது. இதனிடையே 2 யானைகளும் பதுங்கியுள்ள விநாயகபுரம் மற்றும் சுற்று வட்டார கிராம மக்களும், விவசாயிகளும் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
Related Tags :
Next Story