நெரூர் அக்னீஸ்வரர் கோவிலில் நாத உற்சவ பெருவிழா கோலாகலம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்


நெரூர் அக்னீஸ்வரர் கோவிலில் நாத உற்சவ பெருவிழா கோலாகலம் திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 12 Aug 2019 4:00 AM IST (Updated: 12 Aug 2019 2:01 AM IST)
t-max-icont-min-icon

கரூர் அருகே நெரூர் அக்னீஸ்வரர் கோவிலில் நாத உற்சவ பெருவிழா கோலாகலமாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.

கரூர்,

கரூர் அருகேயுள்ள நெரூரில் பிரசித்தி பெற்றதும், பழமை வாய்ந்ததுமான சவுந்தரநாயகி உடனுறை அக்னீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சிவனை மனமுருகி வேண்டினால் திருமணத்தடை நீங்கும், குழந்தை பேறு கிட்டும், கடன் தொல்லை அகன்று வாழ்வில் ஏற்றம் ஏற்படும் என்பது ஐதீகம். முன்னொறு காலத்தில் திருச்செந்தூரில் சூரனை வதம் செய்த முருகப்பெருமானுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது. பின்னர் நாரதரின் அறிவுறுத்தலின் பேரில் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி காவிரி பாயும் இடமான நெரூரில் முருகன் யாகம் வளர்த்தார். அப்போது அக்னியிலிருந்து தோன்றி சிவபெருமான் ஆசி வழங்கி அந்த தோஷத்தை நீக்கி முருகப்பெருமானை அழைத்து சென்றதாக கோவில் ஸ்தல வரலாறு கூறுகிறது.

நாத உற்சவ பெருவிழா

இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையில் மேள வாத்தியம் முழங்க நாதஉற்சவம் நிகழ்த்தப்படுகிறது. அப்போது அக்னீஸ்வரர் இசை கேட்டு ஆனந்த தாண்டவம் ஆடுவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் நேற்று 10-வது ஆண்டாக நெரூர் அக்னீஸ்வரர் கோவிலில் நாத உற்சவ பெருவிழா நடந்தது. இதையொட்டி காலை 6 மணிக்கு மங்கல இசையுடன் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை அக்னீஸ்வரருக்கு நடந்தது. அதனை தொடர்ந்து திருமுறைகள் காட்டும் வழிபாட்டு நெறிமுறைகள் உள்ளிட்டவற்றை விளக்கி கூறும் வகையிலான ஆன்மிக நிகழ்ச்சிகள் நடந்தன.

திரளான பக்தர்கள் தரிசனம்

பின்னர் மாலையில் அக்னீஸ்வரர் மற்றும் தாயாருக்கு பூக்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தன. அதனை தொடர்ந்து 300-க்கும் மேற்பட்ட தவில் மற்றும் நாதஸ்வர கலைஞர்கள் கோவில் வளாகத்தில் அமர்ந்து ஒருசேர கீர்த்தனைகளை இசை மூலம் வெளிப்படுத்தி நாதஉற்சவத்தை நிகழ்த்தினர். இதனை பக்தர்கள் பலரும் ஆர்வத்தோடு கேட்டு ரசித்தனர். இதற்கிடையே அக்னீஸ்வரருக்கு மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதில் கரூர், நெரூர், வாங்கல், வேடிச்சிபாளையம், மண்மங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை தந்து அக்னீஸ்வரரை தரிசனம் செய்து சென்றனர். இதற்கான ஏற்பாடுகளை அக்னீஸ்வரர் அறக்கட்டளை அமைப்பாளர்கள் வக்கீல் மணிவண்ணன், கார்த்திகேயன், புஷ்பராஜ் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

Next Story