நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்மழை, சோலையார் அணை நிரம்பியது
நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக சோலையார் அணை நிரம்பியது.
வால்பாறை,
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் 5-ந் தேதி முதல் தொடங்கியது. ஆனால் போதிய மழை இல்லாததால் அனைத்து தரப்பினரும் ஏமாற்றம் அடைந்தனர். இந்த நிலையில் ஆகஸ்டு மாதம் 6-ந் தேதி முதல் வால்பாறையில் கனமழை பெய்தது. பல்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு, மரங்கள் சாலையில் விழுந்ததால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மேலும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதற்கிடையில் நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த தொடர்மழை காரணமாக பரம்பிக்குளம் ஆழியார் திட்டத்தின் அடிப்படையாக அமைந்துள்ள சோலையார் அணைக்கு நீா்வரத்து அதிகரிக்க தொடங்கியது.
இதனால் அணையின் நீர்மட்டம் கிடு கிடு வென உயர்ந்து வந்தது. இதன் காரணமாக 5 நாட்களில் சோலையார் அணை முழுக் கொள்ளளவான 160 அடியை எட்டியது. அணை நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சோலையார் அணை, முழுக் கொள்ளளவை நேற்று காலை 9 மணிக்கு எட்டியது. இதனைதொடர்ந்து அணையின் மதகு வழியாக தண்ணீர் வடிந்து வருகிறது. மதியம் 1 மணியளவில் சேடல்பாதை வழியாக வினாடிக்கு 825 கனஅடி தண்ணீர் வெளியேறியது. சோலையார் அணை நிரம்பியதால் வருகிற குடிநீர் தட்டுப்பாடு இருக்காது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த 24 மணி நேரத்தில் வால்பாறையில் 70 மி.மீ. மழையும், சோலையார் அணை பகுதியில் 80 மி.மீ. மழையும், சின்னக்கல்லாரில் 100 மி.மீ. மழையும், நீராரில் 82 மி.மீ. மழையும் பெய்துள்ளது.
தொடர்ந்து அணைக்கு வினாடிக்கு 7,100 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து மின்நிலையம்-1 வழியாக வினாடிக்கு 531 கனஅடி தண்ணீரும், சேடல்பாதை வழியாக வினாடிக்கு 825 கனஅடி தண்ணீரும் என மொத்தம் வினாடிக்கு 1,356 கனஅடி தண்ணீர் பரம்பிக்குளம் அணைக்கு செல்கிறது.
மேலும் மின்நிலையம்-2 இயக்கப்பட்டு வினாடிக்கு 452 கனஅடி தண்ணீர் ஒப்பந்தப்படி, கேரளாவிற்கு திறந்துவிடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று அதிகாலை முதல் வால்பாறை பகுதியில் மழை குறைந்து 15 நாட்களுக்குப் பிறகு வெயில் அடித்தது. இந்த ஆண்டுதான் 6 நாட்களில் சோலையார் அணை முழுக் கொள்ளளவை எட்டியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story