கோவை மாவட்டத்தில் கனமழையால் பாதிப்பு, போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி
கோவையில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.
கோவை,
கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அங்கு சீரமைப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் பலத்த மழையால் பாதிக்கப்பட்ட தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மூங்கில் மடை குட்டை, மாளியங்குட்டை, பச்சினம்பதி ஆகிய பகுதிகளிலும், பெருமாள்கோவில்பதியில் உள்ள முண்டந்துறை அணை அருகில் பாதிப்புக்குள்ளான சிறுபாலத்தினையும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அதைத்தொடர்ந்து கனமழையால் பாதிக்கப்பட்டு வளையன்குட்டை அரசு தொடக்கப் பள்ளி தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள 65 பேருக்கு அரிசி, சர்க்கரை, பால்பவுடர், பிஸ்கட், வேட்டி, சேலைகள், தலையணை மற்றும் போர்வைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்திய வானிலை தொடர்பு மையத்தின் மூலம் கனமழை பொழிவு தொடர்பான எச்சரிக்கை வரப்பெற்றவுடனே, கனமழை பொழிவு உள்ள மாவட்டங்களை முதல்-அமைச்சர் கண்டறிந்தார். அந்த பகுதி அமைச்சர்கள் மற்றும் மாவட்ட கலெக்டர்களுக்கு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக்கூட்டங்கள் வாயிலாக அவர் அறிவுறுத்தினார். மேலும், தேசிய மற்றும் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் துறையினரையும் தயார் நிலையில் வைத்திருக்க உத்தரவிட்டார்.
அதன்படி, கோவை மாவட்டத்தில் கனமழை பெய்தபோதும் பெரிய அளவில் எங்கும் பாதிப்பு ஏற்படவில்லை. மேலும், கனமழையின்போது சாலையில் தேங்கிய நீரும் போர்க்கால அடிப்படையில் ஜெனரேட்டர்கள் மற்றும் பெரிய அளவிலான நீர் இறைப்பான்கள் மூலம் நீர் வெளியேற்றப்பட்டு உடனடியாக போக்குவரத்து சீர்செய்யப்பட்டது. ஆற்றங்கரையோரம் வெள்ளம் சூழும் பகுதிகளை கண்டறிந்து அங்கு குடியிருக்கும் மக்களை முன்னதாகவே, அருகாமையில் உள்ள பள்ளிக்கட்டிடங்கள், திருமண மண்டபங்கள் மற்றும் பொதுக்கட்டிடங்களில் தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டனர்.
கனமழையின் சூழலை சமாளிக்கவும், அதனால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து பொதுமக்கள் பாதிக்காதவாறு, இயல்பு நிலை திரும்ப போர்கால நடவடிக்கை மேற்கொள்ளவும், வருவாய் துறையினர், வளர்ச்சித்துறையினர், தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் துறையினர் என அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் துணை கலெக்டர் நிலையில் உள்ள அலுவலர்களின் தலைமையில் வெள்ள பாதிப்பு சீரமைப்பு மற்றும் மீட்புக்குழு அமைக்கப்பட்டு, பல்வேறு துறை அலுவலர்களும் தீவிர களப்பணியாற்றி வருகின்றனர்.மேலும், தேவைகளுக்கு ஏற்ப மழையால் பாதிப்புக்குள்ளாகும் சாலைகள், பொதுக்கட்டிடங்கள், பள்ளிக்கட்டிடங்கள், பாலங்கள் என அனைத்தினையும் உடனடியாக சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக நடந்த ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் ராஜாமணி, மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ், மாவட்ட வருவாய் அதிகாரி ராம துரைமுருகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் ரூபன்சங்கர்ராஜ், கோட்ட வருவாய் அதிகாரி தனலிங்கம், பொதுப்பணித்துறை நீர்வள ஆதார செயற்பொறியாளர் ஜெயபிரகாஷ், உதவி இயக்குனர் (பேரூராட்சிகள்) துவாரகநாத்சிங் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story