கூடலூர், பந்தலூரில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் - மு.க.ஸ்டாலின் நேரில் வழங்கினார்
கூடலூர், பந்தலூரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று வழங்கினார்.
கூடலூர்,
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்தது. அப்போது ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட்டு, சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மேலும் நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன், வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. மரங்கள் முறிந்து மின்கம்பிகள் மீது விழுந்ததில், மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் பல ஆதிவாசி கிராமங்கள் இருளில் மூழ்கின. இதற்கிடையில் பலத்த மழைக்கு 7 பேர் பலியாகினர். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஆங்காங்கே உள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அரசு சார்பில் செய்து கொடுக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று ஊட்டிக்கு வந்தார். பின்னர் ஊட்டி அருகே அனுமாபுரம் இந்திரா நகரில் வீடு இடிந்து பலியான அமுதாவின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் நிவாரண தொகை வழங்கினார்.
இதைத்தொடர்ந்து கூடலூருக்கு மாலை 4.15 மணிக்கு மு.க.ஸ்டாலின் வந்தார். அங்கு அரசு மேல்நிலைப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டு உள்ள ஓவேலி பேரூராட்சியை சேர்ந்த மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். மேலும் அவர்களுக்கு தேவையான வேட்டி, சேலை உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார். பின்னர் அங்கிருந்து தொரப்பள்ளி உண்டு உறைவிட பள்ளிக்கு சென்றார். அங்கு தங்கியுள்ள மக்களிடம் மழை வெள்ள பாதிப்புகள் குறித்து கேட்டறிந்து, ஆறுதல் கூறினார்.
இதையடுத்து அத்திப்பாளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தங்கி உள்ள மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அப்போது மழையை விட மதுக்கடையால் மிகுந்த சிரமத்துக்கு ஆளாவதாக அப்பகுதியை சேர்ந்த பெண்கள் புகார் தெரிவித்தனர். இதை கேட்டறிந்த மு.க.ஸ்டாலின், அந்த மதுக்கடையை அகற்ற கலெக்டரிடம் வலியுறுத்துவதாக உறுதி அளித்தார். பின்னர் கேரளா நோக்கி பாயும் பாண்டியாற்றை பார்வையிட்டார்.
அதன்பின்னர் அங்கிருந்து பந்தலூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சென்ற அவர், அங்கு தங்கி உள்ள மக்களிடம் குறைகளை கேட்டறிந்து நிவாரண பொருட்களை வழங்கினார். முன்னதாக கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் தி.மு.க. தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் சாலையின் இருபுறமும் நின்று அவரை வரவேற்றனர். இதைத்தொடர்ந்து சேரம்பாடிக்கு செல்லும் வழியில் மண் சரிவு ஏற்பட்ட இடத்தை பார்வையிட்டார். பின்னர் சேரம்பாடி தனியார் மண்டபத்தில் தங்கி உள்ள மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
நீலகிரியின் கடைகோடி பகுதிகள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதை அறிந்து மிகவும் வேதனைக்கு உள்ளானேன். ஏழை, எளிய மக்கள் மற்றும் தோட்டத்தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்கி வருகிறேன். கடந்த தி.மு.க. ஆட்சியில் மழை வெள்ள சேதம் ஏற்பட்டபோது, நீலகிரி எம்.பி. ஆ.ராசா மூலம் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. இப்போது நானே நேரடியாக வந்து வழங்குகிறேன். ஆனால் ஆளுங்கட்சியினர் யாரும் உங்களை திரும்பி பார்க்கவில்லை. நான் உங்களிடம் பெற்ற கோரிக்கை மனுக்களை மாவட்ட கலெக்டரிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவேன். மேலும் முதல்-அமைச்சரை சந்தித்து பேசுவேன். அதன்பின்னரும் நடவடிக்கை எடுக்காவிட்டால் தி.மு.க. சார்பில் போராட்டம் நடத்தப்படும்.
தற்போதைய அ.தி.மு.க. ஆட்சி, தி.மு.க. தயவில் நடந்து வருகிறது. டெல்டா மாவட்டத்தில் கஜா புயல் பாதிப்பு ஏற்பட்டபோது, அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாங்கள் நிவாரண பொருட்கள் வழங்கினோம். சென்னையை வெள்ளம் சூழ்ந்தபோது கூட அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவ்வாறு அவர் பேசினார். பின்னர் அய்யன்கொல்லி, அம்பலமூலா அரசு பள்ளிகளில் தங்கி உள்ள மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். முன்னதாக சென்னையில் இருந்து விமானம் மூலம் காலை 10.30 மணிக்கு மு.க.ஸ்டாலின் கோவைக்கு வந்தார். அவரை நீலகிரி எம்.பி. ஆ.ராசா, பொள்ளாச்சி எம்.பி. சண்முகசுந்தரம், சிங்காநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ. நா.கார்த்திக், முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி மற்றும் முபாரக், கா.ராமச்சந்திரன், பா.அருண்குமார், வக்கீல் அருள்மொழி, வெங்கடேஷ் ஆகியோர் வரவேற்றனர். அதன்பின்னர் அவர் காரில் ஊட்டிக்கு புறப்பட்டு சென்றார்.
Related Tags :
Next Story