விருப்பாச்சி தலையூத்து அருவிக்கு செல்லும் வழியில், ரூ.28 லட்சத்தில் பாலம் அமைக்கும் பணி தொடக்கம்
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியால் விருப்பாச்சி தலையூத்து அருவிக்கு செல்லும் வழியில் நங்காஞ்சி ஆற்றின் குறுக்கே ரூ.28 லட்சத்தில் புதிய பாலம் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது.
சத்திரப்பட்டி,
ஒட்டன்சத்திரம் தாலுகா, விருப்பாச்சியில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் தலையூத்து அருவி அமைந்துள்ளது. சுற்றுலா தலமான இங்கு விடுமுறை நாட்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வந்து நீராடி செல்கின்றனர். மேலும் பழனி, கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளும் இங்கு வந்து செல்வது வழக்கம். வடகாடு, பரப்பலாறு மலைப்பகுதியில் மழை பெய்யும் காலங்களில் அருவியில் நீர்வரத்து இருக்கும்.
சுதந்திர போராட்ட காலத்தில் விருப்பாட்சி கோபால் நாயக்கர், திப்புசுல்தான், வேலுநாச்சியார், மருதுபாண்டியர்கள் ஆகியோர் இங்கு முகாமிட்டு ஆயுதப்பயிற்சி பெற்றதாக வரலாறு உள்ளது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த தலையூத்து அருவி பகுதிக்கு செல்லும் வழியில் நங்காஞ்சி ஆற்றின் குறுக்கே பாலம் இல்லாததால் சுற்றுலா பயணிகள் சென்று வருவதில் பெரும் சிரமம் ஏற்பட்டது. அதேபோல் வடகிழக்கு பருவமழை காலங்களில் நங்காஞ்சி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். எனவே தலையூத்து அருவி அருகே தோட்டத்து பகுதியில் உள்ள விவசாயிகள், மாணவர்கள் விருப்பாட்சி, ஒட்டன்சத்திரம் செல்ல ஆற்றை கடக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தனர்.
இந்நிலையில் தலையூத்து பகுதியில் நங்காஞ்சி ஆற்றின் குறுக்கே பாலம் இல்லாதது குறித்து ‘தினத்தந்தி’ நாளிதழில் செய்தி பிரசுரமானது. இதன் எதிரொலியாக அங்கு புதிதாக பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றிய தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 50 மீட்டர் நீளத்தில் ரூ.28 லட்சத்தில் பாலம் அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
முதற்கட்டமாக அங்கு ஆற்றின் குறுக்கே பள்ளம் தோண்டப்பட்டு, நீர் செல்லும் பாதையில் பெரிய குழாய்கள் வைக்கப்பட்டு வருகின்றன. இந்த பணிகள் ஒட்டன்சத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கண்ணன், மகேந்திரன் மற்றும் ஒன்றிய பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் மேற்பார்வையில் நடைபெற்று வருகின்றன.
Related Tags :
Next Story