சுருளி அருவியில் நுழைவு கட்டணத்தை உயர்த்த எதிர்ப்பு, கம்பம் வனச்சரக அலுவலகத்தை மா.கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகை


சுருளி அருவியில் நுழைவு கட்டணத்தை உயர்த்த எதிர்ப்பு, கம்பம் வனச்சரக அலுவலகத்தை மா.கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகை
x
தினத்தந்தி 13 Aug 2019 4:30 AM IST (Updated: 13 Aug 2019 12:15 AM IST)
t-max-icont-min-icon

சுருளி அருவியில் நுழைவு கட்டணம் உள்ளிட்ட பல்வேறு கட்டணங்களை உயர்த்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கம்பம் வனச்சரக அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகையிட்டனர்.

கம்பம்,

கம்பம் அருகே சுற்றுலா தலமாகவும், புண்ணிய ஸ்தலமாகவும் சுருளி அருவி விளங்கி வருகிறது. இங்கு அருவியில் நீராடுவதற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இவையில்லாமல் ஆடி அமாவாசை, தை அமாவாசை போன்ற நாட்களில் அருவியில் புனித நீராடி விட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வருகின்றனர்.

கம்பம் கிழக்கு வனச்சரகத்தின் சார்பில் இந்த அருவியில் நுழைவுகட்டணம் ரூ.5 வசூலிக்கப்படுகிறது. மேலும் அடிவாரத்தில் இருந்து அருவிக்கு வனத்துறை பஸ்சில் செல்ல நபருக்கு ரூ.20-ம், அருவி வளாகத்தில் சைக்கிள் சவாரி செய்ய 1 மணி நேரத்திற்கு ரூ.10-ம், மாற்றுத்திறனாளிகள் பேட்டரி காரில் செல்ல நபர் ஒன்றுக்கு ரூ.25-ம் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்தியா முழுவதும் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்களில் நுழைவு கட்டணங்களை உயர்த்த மத்திய வனத்துறை அமைச்சகம் முடிவெடுத்துள்ளது. அதன்பேரில் சுருளி அருவியில் நுழைவு கட்டணம் உள்ளிட்ட பிற கட்டணங்களை 2 மடங்காக உயர்த்தி வசூலிக்க கம்பம் கிழக்கு வனச்சரகம் முடிவு செய்து இருப்பதாக தெரிகிறது. இதுகுறித்து சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. இந்த கட்டண உயர்வுக்கு பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகிறது.

இந்த நிலையில் சுருளி அருவியில் நுழைவு கட்டணம், புகைப்பட கருவிக்கு கட்டணம் உள்ளிட்ட பல்வேறு கட்டணங்களின் உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் காந்தி சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் முன்னாள் எம்.எல்.ஏ. லாசர் தலைமை தாங்கினார்.

கம்பம் பகுதி செயலாளர் நாகராஜன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். பின்னர் காந்தி சிலையில் இருந்து ஊர்வலமாக பத்திரப்பதிவு அலுவலகம், பாரஸ்ட் ரோடு வழியாக வனச்சரக அலுவலக வாசலை முற்றுகையிட்டனர். அப்போது கட்டணத்தை உயர்த்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர்.

தகவலறிந்த கூடலூர் வடக்கு இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தலைமையில் போலீசார் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் வனச்சரகர் ஜீவனாவை சந்தித்து கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்வது தொடர்பாக கோரிக்கை மனுவை அளிக்க அனுமதிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் வலியுறுத்தினர். வனச்சரகர் பணி நிமித்தமாக தேனி வன அலுவலகத்திற்கு சென்று இருப்பதால் வனவர் திலகரிடம் மனு அளிக்கும்படி போலீசார் கூறினர். இதையடுத்து வனவரை சந்தித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மனுவை அளித்தனர். பின்னர் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story