கல்விராயன்பேட்டையில் கல்லணைக்கால்வாயில் உடைப்பு ஏற்பட்ட இடத்தில் கான்கிரீட் சுவர் அமைக்கும் பணி


கல்விராயன்பேட்டையில் கல்லணைக்கால்வாயில் உடைப்பு ஏற்பட்ட இடத்தில் கான்கிரீட் சுவர் அமைக்கும் பணி
x
தினத்தந்தி 12 Aug 2019 10:45 PM GMT (Updated: 12 Aug 2019 7:21 PM GMT)

தஞ்சையை அடுத்த கல்விராயன்பேட்டையில் கல்லணைக்கால்வாயில் உடைப்பு ஏற்பட்ட இடத்தில் கான்கிரீட் சுவர் அமைக்கும் பணி தண்ணீர் வரும் நேரத்தில் நடைபெறுவதால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

தஞ்சாவூர்,

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது. இதில் தஞ்சை மாவட்டத்தில் பெரும்பகுதி கல்லணைக்கால்வாய் மூலம் பாசன வசதி பெறுகிறது. குறிப்பாக கல்லணைக்கால்வாய் மூலம் தஞ்சை, ஒரத்தநாடு, திருவோணம், பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், பேராவூரணி, சேதுபாவாசத்திரம், புதுக்கோட்டை மாவட்டத்தில் சில பகுதிகள் பாசன வசதி பெறுகின்றன.

கல்லணைக்கால்வாய் மூலம் தஞ்சை மாவட்டத்தில் 58 ஏ பிரிவு வாய்க்கால்கள், 2,084 பி பிரிவு வாய்க்கால்கள், 1980 சி பிரிவு வாய்க்கால்கள், 783 டி பிரிவு வாய்க்கால்கள், 182 இ பிரிவு வாய்க்கால்கள் செல்கின்றன. இது தவிர புதுக்கோட்டை மாவட்டத்தில் 7 ஏ பிரிவு வாய்க்கால்களும், 24 பி பிரிவு வாய்க்கால்களும் உள்ளன. இந்த வாய்க்கால்கள் மூலம் தஞ்சை மாவட்டத்தில் 2 லட்சம் ஏக்கரும், புதுக்கோட்டை மாவட்டத்தில் 28 ஆயிரம் ஏக்கரும் பாசன வசதி பெறுகின்றன.

உடைப்பு

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு இன்று(செவ்வாய்க்கிழமை) பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்த தண்ணீர் கல்லணையை வந்தடைந்தவுடன் அங்கிருந்து டெல்டா பாசனத்துக்கு காவிரி, வெண்ணாறு, கல்லணைக்கால்வாய் மற்றும் கொள்ளிடம் ஆறு ஆகிய ஆறுகளில் திறந்து விடப்படும். கடந்த ஆண்டும் இதேபோல் கர்நாடகாவில் இருந்து 3 லட்சம் கன அடிக்கும் மேல் தண்ணீர் வந்தது. மேட்டூர் அணையும் விரைவில் நிரம்பியதால் அந்த தண்ணீர் காவிரி மற்றும் கொள்ளிடத்தில் திருப்பி விடப்பட்டது. கல்லணைக்கால்வாயிலும் அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டது. அப்போது தஞ்சையை அடுத்த கல்விராயன்பேட்டை அருகே உடைப்பு ஏற்பட்டது. இதனால் தண்ணீர் வயல்வெளிக்குள் புகுந்து கள்ளப்பெரம்பூர் ஏரியை சென்றடைந்தது. ஏராளமான ஏக்கர் வயல்களும் சேதம் அடைந்தன.

கான்கிரீட் தடுப்புச்சுவர்

கடந்த ஆண்டு மேட்டூர் அணை மூடப்பட்ட பின்னர் கல்லணைக்கால்வாயில் உடைப்பு ஏற்பட்ட இடத்தில் பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் தற்போது தண்ணீர் திறந்து விடப்படுவதால் மீண்டும் உடைப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக ஏற்கனவே உடைப்பு ஏற்பட்ட இடத்தில் கான்கிரீட் சுவர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் தொடங்கி 2 நாட்கள் தான் ஆகிறது.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், “மேட்டூர் அணை மூடப்பட்ட பின்னர் ஆறுகளில் தண்ணீர் வரத்து நின்று விட்டது. அதன் பின்னர் உடைப்பு ஏற்பட்ட இடத்தில் தடுப்புச்சுவர் அமைக்கும் பணிகளை மேற்கொள்ளலாம். 7 மாதங்களாக எந்த பணிகளையும் அவர்கள் மேற்கொள்ளாமல் தற்போது கடந்த 2 நாட்களாக பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள். இதனால் மீண்டும் உடைப்பு ஏற்படுமோ? என்ற அச்சம் விவசாயிகளிடையே ஏற்பட்டுள்ளது” என்றனர்.

Next Story