கறம்பக்குடி அரசு மருத்துவமனை கட்டிட திறப்பு விழா 7-வது தடவையாக தள்ளிவைப்பு


கறம்பக்குடி அரசு மருத்துவமனை கட்டிட திறப்பு விழா 7-வது தடவையாக தள்ளிவைப்பு
x
தினத்தந்தி 12 Aug 2019 11:00 PM GMT (Updated: 12 Aug 2019 8:01 PM GMT)

கறம்பக்குடி அரசு மருத்துவமனை கட்டிட திறப்பு விழா 7-வது தடவையாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

கறம்பக்குடி,

கறம்பக்குடி அரசு மருத்துவமனைக்கு 30 படுக்கைகள் கொண்ட கட்டிடம் ரூ.75 லட்சம் மதிப்பில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கட்டி முடிக்கப்பட்டது. இந்த கட்டிடத்தை உடனடியாக திறந்து நோயாளிகளின் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் அனைத்து கட்சியினரும் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வந்தனர். இதையடுத்து கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மருத்துவமனை கட்டிடத்தை திறந்து வைப்பதாக அறிவிக்கப்பட்டது.

மருத்துவமனையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. ஆனால் அன்றைய தினம் கறம்பக்குடி பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அமைச்சர் சென்றதால் மருத்துவமனை கட்டிட திறப்பு விழாவிற்கு வரவில்லை. இதனால் கட்டிட திறப்பு விழா தள்ளி வைக்கப்பட்டது. பின்னர் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 6 தடவை திறப்பு விழாவிற்கான தேதி குறிக்கப்பட்டு ஏற்பாடுகளும் நடைபெற்று பல்வேறு காரணங்களால் கட்டிடம் திறக்கப்படவில்லை.

திறப்பு விழா தள்ளிவைப்பு

பணிகள் முடிந்து 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் மருத்துவமனை கட்டிடம் திறக்கப்படாததை கண்டித்து தி.மு.க. உள்ளிட்ட கட்சியினர் போராட்டம் நடத்தினர். இதையடுத்து கடந்த மாதம் தாசில்தார் தலைமையில் நடந்த சமாதான கூட்டத்தில் ஆகஸ்டு முதல் வாரத்தில் மருத்துவமனை கட்டிடம் திறக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. அதன்படி நேற்று கறம்பக்குடி அரசு மருத்துவமனை புதிய கட்டிடத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திறந்து வைப்பதாக அறிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து புதிய மருத்துவமனை கட்டிடம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. மருத்துவமனை வளாகத்தில் மேடையும் அமைக்கப்பட்டது. காலையிலிருந்தே டாக்டர்கள், மருத்துவமனை ஊழியர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் விழா நடைபெறும் இடத்தில் காத்திருந்தனர். ஆனால் கடைசி நேரத்தில் அமைச்சர் வர இயலாததால் திறப்பு விழா தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப் பட்டது.

7-வது தடவையாக...

ஏற்கனவே 6 முறை தள்ளி வைக்கப்பட்ட மருத்துவமனை கட்டிடம் திறப்பு விழா 7-வது தடவையாக தள்ளி வைக்கப்பட்டது பொதுமக்கள், நோயாளிகளை அதிருப்தி அடைய செய்துள்ளது. இட நெருக்கடியிலும், படுக்கை வசதி இல்லாமலும் நோயாளிகள் தவித்து வரும் நிலையில் மருத்துவமனை கட்டிட திறப்பு விழா தொடர்ந்து தள்ளி வைக்கப்படுவதற்கான காரணம் தெரியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.

Next Story