தற்கொலை செய்த தொழிலாளி அடையாளம் தெரிந்தது, குழந்தை இல்லாததால் மனைவி வேறு திருமணம் செய்ய வேண்டி விபரீத முடிவு


தற்கொலை செய்த தொழிலாளி அடையாளம் தெரிந்தது, குழந்தை இல்லாததால் மனைவி வேறு திருமணம் செய்ய வேண்டி விபரீத முடிவு
x
தினத்தந்தி 13 Aug 2019 4:15 AM IST (Updated: 13 Aug 2019 1:57 AM IST)
t-max-icont-min-icon

சேந்தமங்கலம் அருகே தற்கொலை செய்து கொண்ட தொழிலாளி அடையாளம் தெரிந்தது. குழந்தை இல்லாததால் மனைவி 2-வது திருமணம் செய்து கொள்ள வேண்டி இந்த விபரீத முடிவை அவர் எடுத்தது, போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

சேந்தமங்கலம், 

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே பச்சுடையாம்பட்டி புதூர் தேன்கரடு பகுதியில் ஒரு மரத்தில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தூக்கில் வாலிபர் ஒருவரின் உடல் தொங்கியது. இது குறித்து அக்கம்பக்கத்தினர் சேந்தமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் அந்த பகுதிக்கு சென்று பிணத்தை கைப்பற்றி சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பிரேத பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து சேந்தமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலை செய்து கொண்டவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? மற்றும் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வந்தனர். மேலும் இறந்தவரின் அடையாளங்களை துண்டு பிரசுரமாக வெளியிட்டும் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் நேற்று தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூரை சேர்ந்த சந்திரா (வயது 22) என்பவர் சேந்தமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு வந்தார். பின்னர் அவர் போலீசாரிடம் தேன்கரட்டில் தற்கொலை செய்து கொண்டவர் தனது கணவர் ஜெகதீசன் (27) என்றும், அவர் கல் உடைக்கும் தொழிலாளியாக வேலை செய்து வந்ததாகவும், போலீசார் வெளியிட்ட துண்டு பிரசுரத்தில் இருந்த அடையாளங்கள் மூலமாக தெரிந்து கொண்டதாகவும் கூறினார்.

இதையடுத்து அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். அதில் அதிர்ச்சி தகவல் வெளியானது. இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறப்பட்டதாவது:-

தற்கொலை செய்த ஜெகதீசனுக்கும், சந்திராவுக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஆனால் இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் மனவேதனையில் இருந்த ஜெகதீசன் மனைவியை 2-வது திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி வந்தார்.

2-வது திருமணம் செய்ய விருப்பம் இல்லாததால் சந்திரா அதற்கு மறுத்து வந்தார். இதன் காரணமாக வாழ்க்கையில் விரக்தி அடைந்த ஜெகதீசன் தான் உயிரோடு இருக்கும் வரை மனைவி 2-வது திருமணம் செய்து கொள்ள மாட்டார் என எண்ணினார். இதையடுத்து அவர் வீட்டை விட்டு வெளியேறி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து விசாரணை முடிந்து சந்திராவிடம், பிரேத பரிசோதனை செய்யப்பட்ட ஜெகதீசன் உடலை போலீசார் ஒப்படைத்தனர். குழந்தை இல்லாததால் மனைவி வேறு திருமணம் செய்து கொள்ள வேண்டி வாலிபர், விபரீத முடிவு எடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story