குமரி மாவட்டத்தில் பக்ரீத் சிறப்பு தொழுகை ஏராளமானவர்கள் பங்கேற்பு


குமரி மாவட்டத்தில் பக்ரீத் சிறப்பு தொழுகை ஏராளமானவர்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 12 Aug 2019 10:30 PM GMT (Updated: 12 Aug 2019 8:32 PM GMT)

குமரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை நடந்தது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் பக்ரீத் பண்டிகை நேற்று வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வசிக்கும் முஸ்லிம்கள் அதிகாலையிலேயே எழுந்து புது ஆடைகள் அணிந்து பள்ளி வாசல்களுக்கு சென்று சிறப்பு தொழுகை நடத்தினர்.

நாகர்கோவில் இளங்கடையில் உள்ள ஈத்கா மைதானத்தில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் ஏராளமான ஆண்களும், பெண்களும் பங்கேற்றனர். ஆண்களுக்கு தனியாகவும், பெண்களுக்கு தனியாகவும் தொழுகை நடந்தது.

வாழ்த்து

இதேபோன்று வடசேரி, பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி, கட்டபொம்மன் சந்திப்பு, இடலாக்குடி, மார்த்தாண்டம், குளச்சல், கருங்கல், குழித்துறை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள பள்ளிவாசல்களிலும் நேற்று பக்ரீத் தொழுகை நடந்தது. தொழுகை முடிந்ததும் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் கைகொடுத்து பக்ரீத் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

தொலை தூரத்தில் வசிப்பவர்களுக்கு பக்ரீத் வாழ்த்துகளை செல்போனில் குறுஞ்செய்தியாக அனுப்பினர். பக்ரீத் பண்டிகையையொட்டி அனைத்து முஸ்லிம் இல்லங்களிலும் பிரியாணி உணவு சமைக்கப்பட்டது. இந்த உணவை அக்கம் பக்கத்தினருக்கும் பகிர்ந்து கொடுத்து மகிழ்ந்தார்கள்.

குளச்சல்- திட்டுவிளை

அழகப்பபுரம் அருகே புன்னார்குளத்தில் அங்குள்ள பள்ளி வாசலில் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் ஒருவருக்கு ஒருவர் பக்ரீத் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். குளச்சல் ஜும்மா பள்ளிவாசலில் நேற்று காலை 8.30 மணியளவில் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.

திட்டுவிளை ஜும்மா பள்ளிவாசலில் நடந்த சிறப்பு தொழுகையில் ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர். தொழுகை முடிந்த பிறகு ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி பக்ரீத் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர். முன்னதாக இமாம் அசன் அலியார் பக்ரீத் தொழுகை பற்றி பேசினார். மூத்த பேஷ் இமாம் சயீது ரகுமானி தொழுகை நடத்தினார். முடிவில் ஜமா அத் தலைவர் மைதீன்பிள்ளை பக்ரீத் வாழ்த்துக்களை கூறி இனிப்பு வழங்கினார்.

கன்னியாகுமரி- தக்கலை

கன்னியாகுமரி மந்தாரம்புதூர் ஈத்கா திடலில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடந்தது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாவட்ட தலைவர் சேக் அலி தலைமை தாங்கினார். பஞ்சலிங்கபுரம் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் காஜா முகைதீன் முன்னிலை வகித்தார். சிறப்பு தொழுகையில் ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தக்கலை அஞ்சுவன்னம் பீர்முகமதியா முஸ்லிம் அமைப்பு சார்பில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை பள்ளித்தெருவில் நடந்தது. இதில் ஏராளமான ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டனர்.

Next Story