ரெயிலில் ராமேசுவரம் வந்த ஒடிசா மாநில சிறுவன் பெற்றோரிடம் ஒப்படைப்பு


ரெயிலில் ராமேசுவரம் வந்த ஒடிசா மாநில சிறுவன் பெற்றோரிடம் ஒப்படைப்பு
x
தினத்தந்தி 12 Aug 2019 10:00 PM GMT (Updated: 12 Aug 2019 9:47 PM GMT)

பிளஸ்-1 வகுப்பில் தோல்வி அடைந்ததால் ரெயில் ஏறி ராமேசுவரம் வந்து மீட்கப்பட்ட ஒடிசா மாநில சிறுவன் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டான்.

ராமநாதபுரம்,

ராமேசுவரம் ரெயில் நிலையத்தில் கடந்த 4-ந்தேதி இரவு சிறுவன் ஒருவன் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த சிறுவனை ரெயில்வே போலீசார் பிடித்து சைல்டுலைன் அமைப்பினரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் சிறுவன் ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டம் கவுராதேய்பூர் பகுதியை சேர்்ந்த திரிலோசன் ரவுத் என்பவரின் மகன் சாந்துனு ரவுத்(வயது 17) என்பது தெரிந்தது. இதனை தொடர்ந்து சிறுவனை மீட்டு ராமநாதபுரம் குழந்தைகள் நல குழுமத்தில் ஒப்படைத்தனர். சிறுவன் மீட்கப்பட்டது தொடர்பாக அவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நேற்று சிறுவனின் தந்தை திரிலோசன் ரவுத், தாய் சுங்க்யானி ஆகியோர் ராமநாதபுரம் வந்து உரிய ஆவணங்களை காட்டி சிறுவனை அழைத்து சென்றனர். பிளஸ்-1 வகுப்பில் தோல்வி அடைந்ததால் பள்ளிக்கு செல்லாமல் இருந்து வந்ததாகவும், இதனை பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்து ராமேசுவரத்திற்கு வந்துவிட்டதாகவும் தெரிவித்தனர்.

ராமநாதபுரம் குழந்தைகள் நல குழும தலைவர் துரைராஜ், உறுப்பினர் கனகராஜ், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் துரைமுருகன், மனித வர்த்தக கடத்தல் தடுப்பு பிரிவு காவலர் கேசவன் ஆகியோர் சிறுவனின் பெற்றோர் என்பதற்கான கிராம நிர்வாக அலுவலரிடம் பெற்று வந்த சான்றிதழ், பள்ளி மாற்றுச்சான்றிதழ் ஆகியவற்றை வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

சிறுவன் மற்றும் பெற்றோருக்கு கவுன்சிலிங் வழங்கி தொடர்ந்து படிக்க வைக்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுரை கூறினர். இதன் முடிவில் அனைத்து விவரங்களும் உறுதி செய்யப்பட்ட பின்னர் சிறுவனை பெற்றோரிடம் ஒப்படைத்து அனுப்பி வைத்தனர்.

Next Story