சாந்தாகுருசில் போலீஸ்காரரை தாக்கிய கல்லூரி மாணவர் கைது
சாந்தாகுருசில் போக்குவரத்து போலீஸ்காரரை தாக்கிய கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார்.
மும்பை,
மும்பை சாந்தாகுருஸ் கிழக்கு ரசாக் ஜங்ஷன் பகுதியில் சம்பவத்தன்று போக்குவரத்து போலீஸ்காரர் சஞ்சய் வட்கே (வயது39) என்பவர் பணியில் இருந்தார். அப்போது, அந்த வழியாக கார் ஒன்று சிக்னலை மீறி சென்றது. இதை கவனித்ததும் போலீஸ்காரர் சஞ்சய் வட்கே காரை வழிமறித்தார்.
இதனால் கோபம் அடைந்த அந்த காரை ஓட்டி வந்த வாலிபர் போலீஸ்காரரை திட்டினார். இதையடுத்து போலீஸ்காரர் சஞ்சய் வட்கே தனது செல்போனில் அந்த காரின் பதிவெண்ணை படம் பிடித்தார்.
இதை பார்த்ததும் மேலும் கோபம் அடைந்த அந்த வாலிபர் காரில் இருந்து கீழே இறங்கி வந்து போலீஸ்காரர் சஞ்சய் வட்கேவின் நெஞ்சில் கையால் ஓங்கி குத்தினார். பின்னர் அங்கிருந்து காருடன் தப்பிஓடிவிட்டார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற போலீசார் வாலிபரை விரட்டி சென்றனர். மேலும் இதுபற்றி கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர்.
இந்தநிலையில், செட்டா நகர் பகுதியில் பணியில் இருந்த போலீசார் காரின் பதிவெண்ணை வைத்து அந்த வாலிபரை பிடித்தனர். பின்னர் அவர் வகோலா போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். போலீசார் அந்த வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தினார்கள்.
இதில், அவர் கலினாவை சேர்ந்த முகமது கலீம் சேக் (வயது25) என்பதும், கல்லூரி மாணவர் என்பதும் தெரியவந்தது. போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story