2 மகள்களுடன், தூக்குப்போட்டு பெண் தற்கொலை


2 மகள்களுடன், தூக்குப்போட்டு பெண் தற்கொலை
x
தினத்தந்தி 12 Aug 2019 11:10 PM GMT (Updated: 12 Aug 2019 11:10 PM GMT)

பெங்களூருவில், கள்ளத்தொடர்பை கைவிட கணவர் மறுத்ததால் மனம் உடைந்த பெண் தனது 2 மகள்களுடன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பெங்களூரு, 

மண்டியா மாவட்டத்தை சேர்ந்தவர் சித்தய்யா(வயது 48). கர்நாடக மின்வாரியத்தில் காவலாளியாக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி ராஜேஸ்வரி(வயது 40). இந்த தம்பதிக்கு மானசா(17), பூமிகா(15) என்ற 2 மகள்கள் இருந்தனர்.

வேலை காரணமாக சித்தய்யா தனது குடும்பத்துடன் பெங்களூரு ஸ்ரீநகரில் உள்ள காலப்பா படாவனேயில் வசித்து வந்தார். சித்தய்யாவின் மூத்த மகள் மானசா பி.யூ. கல்லூரியிலும், பூமிகா 10-ம் வகுப்பும் படித்து வந்தனர். இந்த நிலையில் சித்தய்யாவுக்கும், இன்னொரு பெண்ணுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதுபற்றி அறிந்த ராஜேஸ்வரி கள்ளத்தொடர்பை கைவிடும்படி சித்தய்யாவிடம் கூறி வந்துள்ளார். இதுதொடர்பாக அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் ராஜேஸ்வரி மற்றும் அவருடைய 2 மகள்கள் மனம் உடைந்து காணப்பட்டனர்.

இதற்கிடையே, கடந்த 2 நாட்களுக்கு முன்பு சித்தய்யா தமிழகத்துக்கு சென்றார். இதனால் வீட்டில் ராஜேஸ்வரி தனது மகள்களான மானசா, பூமிகா ஆகியோருடன் இருந்தார். இந்த வேளையில் அவர்கள் 3 பேரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி நேற்று முன்தினம் இரவு ராஜேஸ்வரி தனது மகள்களான மானசா, பூமிகா ஆகியோருடன் சேர்ந்து வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் சம்பவம் குறித்து அனுமந்தநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே, தற்கொலை செய்து கொண்டவர்கள் தங்களது செல்போன் ‘ஸ்டேட்டஸ்’ மூலம் தற்கொலைக்கு சித்தய்யா தான் காரணம் என்பதை எழுதி வைத்திருந்தனர். அதாவது, ‘எங்களது வாழ்க்கையை சீரழித்து விட்டீர்கள். எங்களின் சாவுக்கு நீங்கள் தான் காரணம்’ என்று அவர்கள் குறிப்பிட்டு இருந்தனர். இதுபற்றிய புகாரின் பேரில் அனுமந்தநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story