கோவில் திருவிழாவில் வாண வேடிக்கை, வெடி வெடித்ததில் ஆண் குழந்தை பலி - திருக்கோவிலூர் அருகே பரிதாபம்


கோவில் திருவிழாவில் வாண வேடிக்கை, வெடி வெடித்ததில் ஆண் குழந்தை பலி - திருக்கோவிலூர் அருகே பரிதாபம்
x
தினத்தந்தி 12 Aug 2019 10:45 PM GMT (Updated: 12 Aug 2019 11:31 PM GMT)

திருக்கோவிலூர் அருகே கோவில் திருவிழாவில் வாணவேடிக்கையின்போது வெடி வெடித்ததில் 3 வயது ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

திருக்கோவிலூர்,

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே ஆலூர் கிராமத்தை சேர்ந்தவர் கல்பனா. இவருக்கும் கோவை மாவட்டம் பொள்ளாட்சி அருகே உள்ள ரமணவள்ளிபுதூர் கிராமத்தை சேர்ந்த ராஜா என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு மணிஷ் என்ற 3 வயது ஆண் குழந்தை இருந்தது. இந்த நிலையில் ஆலூர் முத்துமாரியம்மன் கோவிலில் கடந்த 10-ந்தேதி ஆடித்திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவில் கலந்து கொள்வதற்காக ராஜா தனது குடும்பத்துடன் ஆலூருக்கு வந்திருந்தார். நேற்று முன்தினம் இரவு கோவில் திருவிழாவையொட்டி வாணவேடிக்கை நடந்தது. அப்போது மேலே சென்ற வெடி ஒன்று எதிர்பாராதவிதமாக கீழே வந்தபடி வீட்டு திண்ணையில் படுத்து துங்கிக் கொண்டிருந்த மணிஷின் தலை மீது விழுந்து பயங்கரமாக வெடித்து சிதறியது.

இதில் மணிஷின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைபார்த்த ராஜாவின் உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து படுகாயத்துடன் உயிருக்கு போராடிய குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

இதுகுறித்து ராஜா திருக்கோவிலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்அடிப்படையில் திருவிழாவில் வெடி வைத்த எறையூர்பாளையத்தை சேர்ந்த முருகன், ஆலூரை சேர்ந்த சுப்பிரமணியன் ஆகியோர் மீது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உலகநாதன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவில் திருவிழா வாணவேடிக்கையின்போது வெடி வெடித்ததில் 3 வயது ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம் அக்கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story