பேரூர் பகுதியில் பலத்த மழை, 500 ஏக்கர் வெங்காயப்பயிர் தண்ணீரில் மூழ்கி நாசம் - விவசாயிகள் சோகம்
பேரூர் பகுதியில் பெய்த மழையில் அந்த பகுதியில் பயிரிடப்பட்டு இருந்த 500 ஏக்கர் வெங்காயப்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசம் அடைந்தன. இதனால் விவசாயிகள் சோகத்தில் உள்ளனர்.
பேரூர்,
கோவையை அடுத்த பேரூர் அருகேயுள்ள நரசீபுரம், கோட்டைக்காடு, செம்மேடு, தொண்டாமுத்தூர், ஆலாந்துறை, தெனமநல்லூர் உள்பட 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெங்காய பயிர் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. பேரூர் வட்டாரத்தில் மொத்தம் 20,000 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் சின்ன வெங்காயம் பயிரிட்டுள்ளனர்.
இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் தொடங்க வேண்டிய தென்மேற்கு பருவமழை ஜூலை மாதம் இறுதி மற்றும் ஆகஸ்டு முதல் வாரத்தில் தீவிரமடைந்தது. இதனால் வெங்காய பயிர் அறுவடை செய்யும் காலத்தில் பெய்த பலத்த மழையின் காரணமாக வெங்காயம் பயிரிட்டுள்ள பகுதியில் தண்ணீர் சூழ்ந்து உள்ளதால் பயர்கள் கடும் நாசமடைந்து உள்ளன.
பேரூர் சுற்று வட்டார பகுதியில் 500 ஏக்கருக்கு மேல் சின்னவெங்காயம் பயிரிட்டிருந்த இடத்தில் அதிகமான அளவு தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் உடனடியாக வெங்காயத்தை அறுவடை செய்ய முடியவில்லை. தற்போது வெங்காயம் சாகுபடி செய்துள்ள நிலத்தில் உள்ள தண்ணீர் முழுவதும் வடிந்த பிறகே, வெங்காயங்களை அறுவடை செய்ய முடியும்.
இதன் பின்னர் எதிர்பார்த்த விலை கிடைக்குமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது. பெரும்பாலான பகுதியில் அதிகமான மழை தண்ணீர் சூழ்ந்து நிற்பதால் வெங்காயம் அழுகும் சூழ்நிலையும் உள்ளது. இதனால் இப்பகுதியில் வெங்காயம் பயிரிட்ட விவசாயிகள் மிகவும் சோகத்தில் உள்ளனர்.
Related Tags :
Next Story