ஆங்கிலம் படிக்காததால் பிறர் உதவியை நாட வேண்டியுள்ளது - அமைச்சர் கந்தசாமி வருத்தம்


ஆங்கிலம் படிக்காததால் பிறர் உதவியை நாட வேண்டியுள்ளது - அமைச்சர் கந்தசாமி வருத்தம்
x
தினத்தந்தி 13 Aug 2019 5:30 AM IST (Updated: 13 Aug 2019 5:26 AM IST)
t-max-icont-min-icon

நான் அமைச்சராக இருந்தாலும், ஆங்கிலம் படிக்காததால் பிறர் உதவியை நாட வேண்டியுள்ளது என்று அமைச்சர் கந்தசாமி வருத்தத்துடன் கூறினார்.

பாகூர்,

பாகூர் பாரதி அரசு பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் முன்னாள் மாணவர்களின் முதல் சந்திப்பு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வர் கரிமாதியாகி தலைமை தாங்கினார். விஜயவேணி எம்.எல்.ஏ., மாணவர் சங்க செயலாளர் ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விரிவுரையாளர் மேகலா பேசின் வரவேற்றார். சங்க இணை செயலாளர் வெற்றிவேல் நோக்கவுரையாற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கந்தசாமி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு விழா மலரை வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது:-

நான் இப்பள்ளிக்கு கிருமாம்பாக்கத்தில் இருந்து ஊழியர் ஒருவரின் சைக்கிளில் வந்துதான் படித்தேன். அப்போது என்னுடன் எங்கள் ஊரில் இருந்து யாரும் வராததால் பாதிலேயே படிப்பை நிறுத்திவிட்டேன். இப்போது நான் (கந்தசாமி) அமைச்சராக இருந்தாலும் ஆங்கில மொழியை படிக்காததால் கட்சியின் மேலிட தலைவர்களிடம் என்னால் பேச முடியாமல் பிறரின் உதவியை நாட வேண்டியுள்ளது. இந்தநிலை வரும்காலத்தில் எந்த மாணவர்களுக்கும் ஏற்படக்கூடாது.

தற்போது உள்ள பல படித்த இளைஞர்கள் பகல் நேரங்களில் குடித்து நேரத்தை வீணடிக்கின்றனர். சிலர் உழைக்காமல், பைக், செல்போன் வாங்க வேண்டும் என்பதற்காக திருட்டில் ஈடுபடுவது வேதனையாக உள்ளது. பள்ளியில் முன்னாள் மாணவர்களை அழைத்து நிகழ்ச்சிகள் நடத்தி தற்போது உள்ள மாணவர்களை ஒழுக்கமுடையவர்களாக மாற்றவேண்டும்.

இவ்வாறு அமைச்சர் கந்தசாமி பேசினார்.

நிகழ்ச்சியில் புதுச்சேரி சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாட்டு துறை பொறியாளர் ரமேஷ், போலீஸ் அதிகாரி சபிபுல்லா, முன்னாள் மாணவர்கள் சிவபெருமாள், சந்திரன், பாலமுருகன், சசிகலா, தமிழரசி உள்பட பலர் தங்கள் பள்ளிப்பருவ நிகழ்வுகளை நினைவு கூர்ந்தனர்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் தென்னை மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. மேலும் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. முடிவில் பள்ளி தலைமை ஆசிரியர் பழனிசாமி நன்றி கூறினார்.

Next Story