நிவாரண நிதியை மத்திய அரசு விரைவில் வழங்கும்: முதல்-மந்திரி எடியூரப்பா நம்பிக்கை
பாதிக்கப்பட்ட மக்களுடன் அரசு உள்ளதாகவும், அதனால் அவர்கள் கவலைப்பட வேண்டாம் என்றும், கூடிய விரைவில் மத்திய அரசு நிவாரண நிதி வழங்கும் என்ற நம்பிக்கை இருப்பதாக முதல்-மந்திரி எடியூரப்பா தெரிவித் துள்ளார்.
பெங்களூரு,
பெங்களூரு டாலர்ஸ் காலனியில் உள்ள தனது வீட்டில் நேற்று முதல்-மந்திரி எடியூரப்பா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மாநிலத்தில் மழை பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் பார்வையிட்டு உள்ளனர். மழை பாதிப்பு குறித்து மத்திய மந்திரிகளிடம் விரிவான அறிக்கை வழங்கப்பட்டு இருக்கிறது. வருகிற 16-ந் தேதி டெல்லிக்கு செல்ல உள்ளேன். அங்கு மத்திய மந்திரிகளை சந்தித்து மாநிலத்தில் மழை பாதிப்புகள், பலியானவர்கள், வீடுகளை இழந்தவர்கள் குறித்து பேச உள்ளேன். அப்போது மாநிலத்தில் நிவாரண பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கும்படி கோரிக்கை வைக்க உள்ளேன்.
மழையால் ரூ.40 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தற்சமயம் நிவாரண பணிகளை மேற்கொள்ள ரூ.3 ஆயிரம் கோடி வழங்கும்படி ஏற்கனவே மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளேன். கூடிய விரைவில் மத்திய அரசு நிவாரண நிதி வழங்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
மழை பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகளை மேற்கொள்ள முன்னாள் பிரதமர் தேவேகவுடா, முன்னாள் முதல்-மந்திரிகள் சித்தராமையா, குமாரசாமி ஆகியோர் அரசுக்கு முழு ஆதரவு அளித்துள்ளனர். அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துள்ளேன். நிவாரண பணிகளை மேற்கொள்ள எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு அறிவுறுத்தி உள்ளேன். அதன்படி, அவர்களும் தங்களது சக்தியை மீறி வேலை செய்து வருகிறார்கள்.
பாதிக்கப்பட்ட மக்கள் யாரும் கவலைப்பட வேண்டாம். அதற்கான அவசியமும் இல்லை. மாவட்ட கலெக்டர்கள், அரசு அதிகாரிகள் நிவாரண பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்து கொடுக்கும். அந்த மக்களுடன் நானும், இந்த அரசும் எப்போது இருக்கும் என்று தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு எடியூரப்பா கூறினார்.
Related Tags :
Next Story