வறுமை காரணமாக விபரீத முடிவு: கணவரை அடக்கம் செய்த இடத்தில் பெண் தீக்குளித்து தற்கொலை


வறுமை காரணமாக விபரீத முடிவு: கணவரை அடக்கம் செய்த இடத்தில் பெண் தீக்குளித்து தற்கொலை
x
தினத்தந்தி 14 Aug 2019 4:45 AM IST (Updated: 13 Aug 2019 11:25 PM IST)
t-max-icont-min-icon

சிறுகனூர் அருகே வறுமையின் காரணமாக கணவரை அடக்கம் செய்த இடத்தில் 3 குழந்தைகளின் தாய் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

சமயபுரம்,

திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே உள்ள எம்.ஆர்.பாளையத்தை சேர்ந்தவர் முத்துச்செல்வன். இவரது மனைவி பிரியா (வயது 28). இவர்களுக்கு திருமணம் ஆகி 8 ஆண்டுகள் ஆகின்றன. இவர்களுக்கு 7 வயது, 4 வயது மற்றும் 2 வயது என்று மொத்தம் 3 மகன்கள் உள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சமய புரம் கோவில் பூச்சொரிதல் விழாவுக்காக முத்துச்செல்வன் சென்றார். அப்போது, வழியில் அவர் பஸ் மோதி பரிதாபமாக உயிரிழந்தார். முத்துச்செல்வன் மீது மிகுந்த அன்புகொண்டிருந்த பிரியாவால், கண வரின் மரணத்தை தாங்க முடியவில்லை. அவர் நிலைகுலைந்து போனார்.

வாழ்க்கையில் விரக்தி

இந்தநிலையில் அவர் கூலி வேலைக்கு சென்று தனது 3 குழந்தைகளையும் கஷ்டப்பட்டு வளர்த்து வந்தார். இருப்பினும் அவருக்கு போதிய வருமானம் கிடைக்கவில்லை. கணவரின் நினைவு ஒருபக்கம் வாட்டியதாலும், வறுமை ஒரு பக்கம் துரத்தியதாலும் பிரியா மிகவும் மனமுடைந்தார். கடந்த சில நாட்களாக கணவரின் பிரிவை எண்ணி, எண்ணி அழுத பிரியா, வாழ்க்கையில் விரக்தி அடைந்தார். தான் வாழ்வதை விட சாவதே மேல் என்று கருதி, கணவர் சென்ற இடத்துக்கே நாமும் சென்றுவிடலாம் என்று முடிவெடுத்த பிரியா, நேற்று முன்தினம் தனது 3 குழந்தைகளையும் வீட்டிலேயே விட்டுவிட்டு, அவர் மட்டும் வெளியே புறப்பட்டார்.

தீக்குளித்து தற்கொலை

நேராக எம்.ஆர்.பாளையம் உப்பாற்றங்கரைக்கு சென்ற அவர், அங்கு அவருடைய கணவர் முத்துச்செல்வனை அடக்கம் செய்த இடத்தில் வைத்து, தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்த தகவல் அறிந்த சிறுகனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாயை இழந்த மூன்று குழந்தைகளின் எதிர்காலத்தை கேள்வி குறியாக்கி உள்ள இந்த சம்பவம் பிரியாவின் உறவினர்கள் மட்டுமின்றி அப்பகுதி மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Next Story