அரியலூர் மாவட்டத்தில் நடைபெறும் வளர்ச்சித்திட்ட பணிகளை அதிகாரிகள் குழுவினர் ஆய்வு


அரியலூர் மாவட்டத்தில் நடைபெறும் வளர்ச்சித்திட்ட பணிகளை அதிகாரிகள் குழுவினர் ஆய்வு
x
தினத்தந்தி 13 Aug 2019 11:00 PM GMT (Updated: 13 Aug 2019 7:42 PM GMT)

அரியலூர் மாவட்டத்தில் நடைபெறும் வளர்ச்சித்திட்ட பணிகளை அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்தனர்.

அரியலூர்,

அரியலூர் மாவட்டத்திற்கு தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மனுக்கள் குழு அரசு தலைமைக்கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் தலைமையில், உறுப்பினர்கள் அடங்கிய குழு நேற்று வந்தனர். இக்குழுவினர் மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய் முன்னிலையில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப்பணிகளை ஆய்வு செய்தனர். நாளை (அதாவது இன்று) மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தி பொதுமக்கள் மற்றும் சங்கங்களிடமிருந்து மனுக்கள் பெறவுள்ளனர். இக்குழுவினர் நேற்று தேசிய நெடுஞ்சாலைத்துறையின் மூலம் அரியலூரில் ரூ.28 கோடியே 40 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் அரியலூர்- பெரம்பலூர் இணைக்கும் சாலையில் உள்ள ரெயில்வே மேம்பாலத்தினை ஆய்வு செய்தனர். பின்னர் அரியலூர் அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.6 கோடியே 16 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 200 படுக்கைகள் மற்றும் அறுவை சிகிச்சை அரங்கங்களுடன் கூடிய கட்டிடப்பணிகளையும், அதே கட்டிடத்தில் ரூ.88 லட்சம் மதிப்பில் தீயணைப்பு உபகரணங்கள் அமைக்கும் பணியினையும் ரூ.40 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் நடந்து வரும் சாய்தளம் அமைக்கும் பணியினையும் ஆய்வு செய்தனர்.

அலுவலர்களுக்கு அறிவுரை

மேலும் தமிழ்நாடு குடிசைமாற்று வாரியம் சார்பில் அரியலூர் நகராட்சி மூலம் அமைக்கப்படும் 288 குடியிருப்புகள் மூன்றுமாடி அடுக்கு குடியிருப்புகள் மற்றும் ரூ.23 கோடியே 43 லட்சம் மதிப்பீட்டில் குறுமஞ்சாவடியில் கட்டப்பட்டு வரும் குடியிருப்பு கட்டிடத்தினையும் ஆய்வு செய்து பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விரைவாக கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினர். ஆய்வின்போது தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மனுக்கள் குழு உறுப்பினர்கள் அன்பழகன், ஆறுமுகம், சக்கரபாணி, துரை.சந்திரசேகரன், தனியரசு, முருகன், கே.எஸ்.விஜயகுமார், செயலாளர் சீனிவாசன், இணைச்செயலாளர் சாந்தி, குழு அலுவலர் சகுந்தலா, சார்புச் செயலாளர் மோகன்ராஜா, மாவட்ட வருவாய் அலுவலர் பொற்கொடி, திட்ட இயக்குனர் (ஊரக வளர்ச்சி முகமை) சுந்தர்ராஜன், கோட்டப்பொறியாளர் (நெடுஞ்சாலைத்திட்டங்கள் தஞ்சாவூர் கோட்டம்) சாபுதீன், உதவி கோட்டப்பொறியாளர் (தஞ்சாவூர் உட்கோட்டம்) செந்தில்ராஜ், செயற்பொறியாளர் (குடிசை மாற்று வாரியம்) பார்த்திபன், அரியலூர் கோட்டாட்சியர் சத்தியநாராயணன், அரசு தலைமை மருத்துவமனை தலைமை மருத்துவ அலுவலர் ரமேஷ் மற்றும் அலுவலர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.

Next Story