மாவட்ட செய்திகள்

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் மாமல்லபுரம் கடற்கரை கோவிலை இரவு 9 மணி வரை கண்டுகளிக்கலாம் - மத்திய கலாசாரத்துறை தகவல் + "||" + From March next year, you can visit the Mamallapuram Beach Temple at 9 pm

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் மாமல்லபுரம் கடற்கரை கோவிலை இரவு 9 மணி வரை கண்டுகளிக்கலாம் - மத்திய கலாசாரத்துறை தகவல்

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் மாமல்லபுரம் கடற்கரை கோவிலை இரவு 9 மணி வரை கண்டுகளிக்கலாம் - மத்திய கலாசாரத்துறை தகவல்
மாமல்லபுரம் கடற்கரை கோவிலை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இரவு 9 மணி வரை சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்கலாம் என்று மத்திய கலாசாரத்துறை தெரிவித்துள்ளது.
மாமல்லபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தில் 7-ம் நூற்றாண்டில் பல்லவ மன்னர்களால் கட்டப்பட்ட கடற்கரை கோவில் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட உலக பாரம்பரிய நினைவு சின்னமாக உள்ளது. இந்தியாவில் தாஜ்மகாலுக்கு அடுத்தபடியாக அதிக சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்கும் வகையில் மாமல்லபுரம் கடற்கரை கோவில் திகழ்கிறது. மாமல்லபுரம் கடற்கரையில் 7 கோவில் இருந்ததாகவும் அதில் 6 கோவில்கள் கடலில் மூழ்கி விட்டதாகவும், இந்த ஒரு கோவில் மட்டும் கடல் அலையின் சீற்றத்தில் இருந்து தப்பித்ததாகவும் கூறப்படுகிறது. கடல் சீற்றத்தில் இருந்து பாதுகாக்க தொல்லியல் துறை தற்போது கடற்கரை ஓரத்தில் கற்களை கொட்டியும் மரங்களை வளர்த்தும் இந்த கோவிலுக்கு முக்கியத்துவம் கொடுத்து பாதுகாத்து வருகிறது.


மத்திய கலாசாரத்துறையின் கீழ் செயல்படும் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலை தினந்தோறும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை சுற்றுலா பயணிகள் கண்டுகளித்து வந்தனர். மாலை 6 மணிக்கு பிறகு நுழைவு வாயில் மூடப்பட்டு சுற்றுலா பயணிகள் கடற்கரை கோவிலை கண்டுகளிக்க அனுமதிக்கப்படுவதில்லை.

இந்தியா முழுவதும் உள்ள 10 பாரம்பரிய முக்கிய நினைவு சின்னங்களை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இரவு 9 மணி வரை சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்க மத்திய கலாசாரத்துறை உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் மாமல்லபுரம் கடற்கரை கோவிலை காலை 6 மணி முதல் இரவு 9 மணி கண்டுகளிக்கலாம். அதாவது கூடுதலாக 3 மணி நேரம் சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு திறந்து விடப்பட்டிருக்கும். இதனால் இரவு நேரங்களில் வரும் பயணிகள் இனி ஏமாற்றத்துடன் திரும்பமுடியாத வகையில் 9 மணி வரை கடற்கரை கோவிலின் அழகை மின் விளக்கு வெளிச்சத்தில் கண்டுரசிக்கலாம்.

மேலும் கடந்த ஆண்டு மட்டும் மாமல்லபுரம் கடற்கரை கோவிலை உள்நாட்டு பயணிகள் 12 லட்சம் பேரும், வெளிநாட்டு பயணிகள் 65 ஆயிரம் பேரும் கண்டுகளித்துள்ளனர். கடந்த ஆண்டு கடற்கரை கோவில் பார்வையாளர் கட்டணம் மூலம் ரூ.7 கோடி வருவாய் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.