மாட்டுத்தாவணியில் கண்மாய் ஆக்கிரமிப்பை அகற்றுவதில் தாமதம்: பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் நேரில் ஆஜராக மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


மாட்டுத்தாவணியில் கண்மாய் ஆக்கிரமிப்பை அகற்றுவதில் தாமதம்: பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் நேரில் ஆஜராக மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 13 Aug 2019 10:00 PM GMT (Updated: 13 Aug 2019 8:30 PM GMT)

மாட்டுத்தாவணியில் கண்மாய் இடத்தை ஆக்கிரமித்து ஓட்டல் கட்டப்பட்டுள்ளதாக தொடரப்பட்ட வழக்கில் பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் வருகிற 22-ந்தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

மதுரை பொன்னமங்கலம் பெருமாள்கோவில்பட்டியைச் சேர்ந்த தெய்வம், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

மதுரை மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த பஸ் நிலையம் எதிரில் அரசு கண்மாய் என்று வகைப்படுத்தப்பட்ட நிலம் உள்ளது. இந்த நிலத்தை ஏராளமானோர் ஆக்கிரமித்துள்ளனர். அதன் ஒரு பகுதியாக 15 சென்ட் இடத்தை ஆக்கிரமித்து தனியார் ஓட்டல் கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது.

இந்த ஓட்டல் அமைந்துள்ள இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது என கடந்த 2017-ம் ஆண்டு தாசில்தார் அறிக்கை அளித்துள்ளார். அந்த அறிக்கையின் அடிப்படையில் கண்மாய் ஆக்கிரமிப்பை அகற்றும்படி மாநகராட்சி கமிஷனருக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.

ஆனால் அந்த கண்மாய் பொதுப்பணித்துறைக்கு சொந்தமானது. எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் தான் கண்மாய் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி, ஆக்கிரமிப்பை அகற்ற மாநகராட்சி கமிஷனர் மறுத்துவிட்டார்.

கண்மாயை ஆக்கிரமித்து ஓட்டல் கட்டியுள்ளது உறுதிப்படுத்தப்பட்டபோதிலும், கண்மாய் நிலத்தை மீட்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

உடனடியாக நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அனுப்பினேன். இதுவரை எந்த பலனும் இல்லை. எனது மனு அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சத்திய நாராயணன், புகழேந்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, மாநகராட்சி தரப்பிலும், பொதுப்பணித்துறை தரப்பிலும் ஆஜரான வக்கீல்கள், ஆக்கிரமிப்பு இடம் தங்களது துறையின்கீழ் வரவில்லை என்று தெரிவித்தனர்.

இதையடுத்து இந்த வழக்கில் உரிய விளக்கம் அளிக்க தமிழக பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் வருகிற 22-ந்தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Next Story