ராணிப்பேட்டை சிப்காட்டில் விஷவாயு தாக்கி வட மாநில தொழிலாளி பலி; 4 பேர் மயக்கம் - தொழிற்சாலைக்கு ‘சீல்’ வைக்க உதவி கலெக்டர் உத்தரவு


ராணிப்பேட்டை சிப்காட்டில் விஷவாயு தாக்கி வட மாநில தொழிலாளி பலி; 4 பேர் மயக்கம் - தொழிற்சாலைக்கு ‘சீல்’ வைக்க உதவி கலெக்டர் உத்தரவு
x
தினத்தந்தி 14 Aug 2019 3:15 AM IST (Updated: 14 Aug 2019 2:23 AM IST)
t-max-icont-min-icon

ராணிப்பேட்டை சிப்காட்டில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி வடமாநில தொழிலாளி பரிதாபமாக இறந்தார். மேலும் 4 பேர் மயக்கம் அடைந்தனர். இதையடுத்து தொழிற்சாலைக்கு ‘சீல்’ வைக்க உதவி கலெக்டர் உத்தரவிட்டார்.

சிப்காட் (ராணிப்பேட்டை), 

ராணிப்பேட்டை சிப்காட் தொழிற்பேட்டையில் தனியார் ரசாயன தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் பெயிண்ட் உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்கள் உற்பத்தி செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இங்கு 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களும், ஒப்பந்த அடிப்படையில் தொழிலாளர்களும் வேலை பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தொழிலாளர்கள் வேலை பார்த்து கொண்டிருந்தபோது விஷவாயு கசிந்துள்ளது. இதனால் ஒரு தொழிலாளி மயக்கமடைந்தார். அப்போது என்ன நடந்தது என்று பார்க்க சென்ற மற்ற 4 தொழிலாளர்களும் மயக்கமடைந்தனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த சக தொழிலாளர்கள், மயக்கமடைந்த பீகார் மாநிலம் அவுரங்காபாத் பகுதியை சேர்ந்த சுதீந்திராபுய்யா (வயது 26) மற்றும் தொழிற்சாலையில் வேலை பார்த்த சிப்காட் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ராமன் (36), ராஜா (35), மாரிமுத்து(42), உதயகுமார்(35) ஆகிய 5 பேரையும் ராணிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் 5 பேரும் மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இதில் சுதீந்திராபுய்யா மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 4 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையடுத்து சிப்காட் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ராணிப்பேட்டை உதவி கலெக்டர் இளம் பகவத், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை உதவி இயக்குனர் உமாபாரதி, தடயஅறிவியல் நிபுணர் விஜய் மற்றும் வாலாஜா தாசில்தார் பூமா ஆகியோர் தொழிற்சாலையை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

இந்த தொழிற்சாலையில் ஏற்படும் புகையினால் அருகில் உள்ள அக்ராவரம் உள்பட கிராமங்களில் உள்ள மக்களுக்கு மாசு ஏற்பட்டு பாதிப்பு ஏற்படுகிறது என்றும், இந்த தொழிற்சாலையை மூட வேண்டும் என்றும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வாலாஜா விவசாய சங்க தலைவர் பாஸ்கர் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதனை, விசாரணையின் போது பொதுமக்கள் உதவி கலெக்டரிடம் தெரிவித்தனர்.

மேலும் இந்த தொழிற்சாலையில் வேலை பார்க்கின்ற தொழிலாளர்களுக்கு போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுவதில்லை என கூறப்படுகிறது.

இதையடுத்து முதற்கட்ட நடவடிக்கையாக இந்த தொழிற்சாலையில் உற்பத்தியாகும் பொருட்களை ஆய்வுக்கு அனுப்பி அறிக்கை பெறுவது என்றும், அதனடிப்படையில் தொழிற்சாலை மீது நடவடிக்கை எடுப்பது எனவும் அதுவரை தொழிற்சாலையை மூடி ‘சீல்’ வைக்க உத்தரவிட்டுள்ளதாகவும் உதவி கலெக்டர் இளம்பகவத் தெரிவித்தார்.

இதையடுத்து தொழிற்சாலைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

சிப்காட் பகுதியில் விஷவாயு தாக்கி தொழிலாளி பலியான சம்பவம் இந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story