குமரி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்


குமரி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்ற 1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 13 Aug 2019 10:45 PM GMT (Updated: 13 Aug 2019 9:04 PM GMT)

குமரி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் இருந்து, கேரளாவுக்கு கடத்த முயன்ற 1½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் இருந்து ரேஷன் அரிசி கேரளாவுக்கு கடத்தப்பட்டு வருகிறது. அதை தடுக்க போலீசாரும், வருவாய்த்துறை அதிகாரிகளும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் சொத்தவிளையில் ரேஷன் அரிசி மூடைகள் கேரளாவுக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக நேற்று அகஸ்தீஸ்வரம் வட்ட வழங்கல் அதிகாரி சுசீலாவுக்கு தகவல் வந்தது. அதன்பேரில் அவரும் மற்றும் அதிகாரிகளும் அங்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள ஒரு வீட்டின் அருகே மறைவான இடத்தில் ரேஷன் அரிசி மூடைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததை அவர்கள் கண்டுபிடித்தனர். இதைத் தொடர்ந்து அரிசி மூடைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அந்த வகையில் சுமார் ஒரு டன் ரேஷன் அரிசி மூடைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

விசாரணை

ஆனால் அரிசியை பதுக்கி வைத்திருந்தவர்கள் யார்? என்று தெரியவில்லை. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.இதே போல நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் இருந்து பகல் 12 மணிக்கு திருவனந்தபுரத்துக்கு புறப்பட்ட பயணிகள் ரெயிலில் 500 கிலோ ரேஷன் அரிசி மூடைகளை பறக்கும் படை தாசில்தார் சதானந்தன் தலைமையிலான அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த அரிசி மூடைகளையும் கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. இவ்வாறு குமரி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் பறிமுதல் செய்யப்பட்ட 1½ டன் ரேஷன் அரிசி மூடைகள் கோணத்தில் உள்ள குடோனில் ஒப்படைக்கப்பட்டது. 

Next Story