உல்லாஸ்நகரில் 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது; 100 பேர் உயிர் தப்பினர்
உல்லாஸ்நகரில் 5 மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. அந்த கட்டிடத்தில் வசித்து வந்த குடியிருப்புவாசிகள் 100 பேர், ஒருநாளைக்கு முன்னரே வெளியேற்றப்பட்டதால் விபத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்
அம்பர்நாத்,
தானே மாவட்டம் உல்லாஸ்நகரில் மஹக் என்ற அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. 5 மாடிகள் கொண்ட இந்த கட்டிடத்தில் 37 குடும்பங்களை சேர்ந்த சுமார் 100 பேர் வசித்து வந்தனர். தற்போது மழை பெய்து வரும் நிலையில், அந்த கட்டிடத்தில் திடீரென விரிசல் ஏற்பட்டது.
இருப்பினும் குடியிருப்புவாசிகள் இதை பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. இந்தநிலையில், நேற்றுமுன்தினம் காலை 9 மணியளவில் கட்டிடத்தில் உள்ள வீடுகளின் கதவுகள் திறக்க முடியாத அளவுக்கு திடீரென இறுகலாக தளத்தோடு சிக்கி கொண்டு இருந்தன.
இதனால் பூட்டியிருந்த வீடுகளில் இருந்தவர்கள் கதவை திறக்க முடியாமல் வீட்டுக்குள்ளேயே தவித்தனர்.
இதனால் குடியிருப்புவாசிகள் மத்தியில் பீதி உண்டானது. பின்னர் இதுபற்றி மாநகராட்சிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மாநகராட்சி மீட்பு குழுவினர் விரைந்து வந்து கதவுகளை உடைத்து வீடுகளில் இருந்தவர்களை மீட்டனர். இதையடுத்து, அந்த கட்டிட குடியிருப்புவாசிகள் அனைவரும் அதிரடியாக வெளியேற்றப்பட்டனர்.
தொடர்ந்து அந்த கட்டிடத்துக்கு ‘சீல்’ வைத்து மூடப்பட்டது.
இந்தநிலையில், உயர்ந்து நின்ற அந்த கட்டிடம் நேற்று காலை திடீரென இடிந்து விழுந்தது. அப்போது பயங்கர சத்தம்கேட்டது.
சத்தம் கேட்டு பக்கத்து கட்டிடத்தில் வசிப்பவர்கள் பதறி அடித்துக் கொண்டு வெளியே ஓடிவந்து பார்த்தனர். அவர்கள் மஹக் கட்டிடம் இடிந்து தரைமட்டமாகி கிடந்ததை பார்த்து அதிர்ச்சியில் உறைந்தனர்.
மஹக் கட்டிட குடியிருப்புவாசிகளுக்கு அதிர்ஷ்டம் கூடவே இருந்து உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். அந்த கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டு வீடுகளில் கதவுகள் திறக்க முடியாமல் சிக்கியிருந்தது பெரும் விபரீதத்துக்கான அறிகுறி என்பதை தான் உணர்த்தி இருக்கிறது.
நல்லவேளையாக மஹக் கட்டிடத்தில் வசித்து வந்தவர்கள் அனைவரும் ஒரு நாளைக்கு முன்னரே மாநகராட்சியினரால் வெளியேற்றப்பட்டு விட்டனர்.
இதனால் கட்டிடத்தில் வசித்து வந்தவர்கள் அனைவரும் இந்த விபத்தில் இருந்து உயிர் தப்பி இருக்கிறார்கள். அவ்வாறு இல்லாமல் குடியிருப்புவாசிகள் அங்கேயே இருந்து இருந்தால் கட்டிடம் இடிந்து பெரும் உயிர் சேதத்தை உண்டாக்கி இருக்கும் என அந்த பகுதியை சேர்ந்தவர்கள் பீதியுடன் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த மாநகராட்சி அதிகாரிகள் அங்கு வந்து பார்வையிட்டனர். மஹக் கட்டிடம் இடிந்து விழுந்ததை தொடர்ந்து, அதன் அருகில் உள்ள 3 கட்டிடங்களில் வசித்து வருபவர்களும் அதிரடியாக வெளியேற்றப்பட்டனர். மஹக் கட்டிட விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மும்பையில் கனமழை காரணமாக கடந்த மாதம் தென்மும்பை டோங்கிரியில் பழுதடைந்த கட்டிடம் ஒன்று இடிந்து 13 பேரின் உயிரை பறித்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story