ஏனாம் வெள்ள பாதிப்புக்கு கவர்னரை குறை சொல்வதா? பாரதீய ஜனதா எதிர்ப்பு


ஏனாம் வெள்ள பாதிப்புக்கு கவர்னரை குறை சொல்வதா? பாரதீய ஜனதா எதிர்ப்பு
x
தினத்தந்தி 14 Aug 2019 5:30 AM IST (Updated: 14 Aug 2019 5:26 AM IST)
t-max-icont-min-icon

ஏனாம் வெள்ள பாதிப்புக்கு கவர்னரை குறை சொல்வதா? என பாரதீய ஜனதா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

புதுச்சேரி,

புதுவை மாநில பாரதீய ஜனதா கட்சி தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுவை பிராந்தியத்துக்குட்பட்ட மாகி, ஏனாமில் வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்து வருகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் வெள்ளம் சூழ்ந்ததால் வீடுகள் மற்றும் உடைமைகளை இழந்து பொதுமக்கள் தவித்து வருகின்றனர். இதையொட்டி மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரிடர் மேலாண்மைக்காக நிதி வழங்கியுள்ளது.

எனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு போர்க்கால அடிப்படையில் குடும்பத்துக்கு ரூ.5 ஆயிரம் மற்றும் மீனவ மக்களுக்கு நிதி உதவி வழங்க ஏற்பாடு செய்யவேண்டும். மாகி பகுதியில் 30-க்கும் மேற்பட்ட வீடுகள் மழையால் முழுவதுமாக சேதமடைந்துள்ளது. எனவே அவர்களுக்கும் உடனடி நிவாரணம் வழங்கிட வேண்டும்.

பாதிக்கப்பட்ட பகுதியில் தொற்றுநோய், டெங்கு போன்ற நோய்கள் பரவி வருகிறது. ஆனால் மருத்துவ வசதி, வாகன வசதிகள் இல்லாததால் கேரள பகுதியை நம்பி இருக்கவேண்டிய நிலையுள்ளது.

எனவே உடனடியாக அனைத்து வித மருத்துவ வசதிகளையும் ஏற்படுத்திட மருத்துவ குழு ஒன்றை புதுச்சேரியில் இருந்து அனுப்பி வைக்க வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளையும் அரசு குழு அமைத்து ஆய்வு செய்திட வேண்டும். தங்களது தவறை மறைக்க ஏனாம் மழை வெள்ள பாதிப்பிற்கு கவர்னரே காரணம் என்று அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கூறிவருவது ஏற்க முடியாதது. ஏனாம், மாகி பகுதியில் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க பாரதீய ஜனதா கட்சியின் சார்பாக கவர்னரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Next Story