2 பேரை கத்தியால் வெட்டி அட்டகாசம் போதை வாலிபர்களை கைது செய்யக்கோரி பொதுமக்கள் சாலைமறியல்


2 பேரை கத்தியால் வெட்டி அட்டகாசம் போதை வாலிபர்களை கைது செய்யக்கோரி பொதுமக்கள் சாலைமறியல்
x
தினத்தந்தி 15 Aug 2019 3:45 AM IST (Updated: 15 Aug 2019 2:00 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை அருகே 2 பேரை கத்தியால் வெட்டி அட்டகாசத்தில் ஈடுபட்ட போதை வாலிபர்களை கைது செய்யக்கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருகே உள்ள எடப்பாளையம் எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் 2 வாலிபர்கள் போதையில் நேற்று அந்த வழியாக செல்வோரிடம் ரகளையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த 2 பேரிடம் தகராறு செய்து அவர்களை கத்தியால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் அதே பகுதியை சேர்ந்த 3 பேர் அந்த போதை வாலிபர்களை கண்டித்தனர். அவர்களையும் போதை வாலிபர்கள் இரும்பு கம்பியால் தாக்கியதாக கூறப்படுகிறது.

உடனடியாக அவர்களை பிடிக்க பொதுமக்கள் அங்கு திரண்டனர். ஆனால் அதற்குள் போதையில் ரகளையில் ஈடுபட்ட 2 பேரும் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். பின்னர் காயமடைந்தவர்களை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.

இந்த நிலையில் அந்த பகுதி பொதுமக்கள் திருவண்ணாமலை- திருக்கோவிலூர் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் திருவண்ணாமலை கிழக்கு போலீசார் அங்கு வந்தனர். மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் அவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

கஞ்சா விற்பனை

அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், “எங்கள் பகுதியின் அருகே மறைவான இடத்தில் கஞ்சா விற்கப்படுகிறது. போதை தலைக்கேறியவர்கள் பொதுமக்களிடம் தகராறு செய்கின்றனர். அடிதடியில் ஈடுபடுகின்றனர். சில நேரங்களில் இரவில் வாகனங்களில் செல்பவர்களை மடக்கி பணம் பறிக்கின்றனர். இது குறித்து கிழக்கு போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை ஏதும் இல்லை. இரவு நேரங்களில் எங்கள் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும்” என்றனர். நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். 

Next Story