மாவட்ட செய்திகள்

நீர்நிலை ஆக்கிரமிப்பை மீட்க உதவிய தந்தை-மகன் கொலை: சாட்சிகளிடம் நீதிபதி முன்பு வாக்குமூலம் பெற வேண்டும் - மதுரை ஐகோர்ட்டு பரபரப்பு உத்தரவு + "||" + Father-son murder that helped restore aquatic occupation: The witnesses have to confess before the judge - Madurai High Court Order

நீர்நிலை ஆக்கிரமிப்பை மீட்க உதவிய தந்தை-மகன் கொலை: சாட்சிகளிடம் நீதிபதி முன்பு வாக்குமூலம் பெற வேண்டும் - மதுரை ஐகோர்ட்டு பரபரப்பு உத்தரவு

நீர்நிலை ஆக்கிரமிப்பை மீட்க உதவிய தந்தை-மகன் கொலை: சாட்சிகளிடம் நீதிபதி முன்பு வாக்குமூலம் பெற வேண்டும் - மதுரை ஐகோர்ட்டு பரபரப்பு உத்தரவு
கரூர் அருகே நீர்நிலை ஆக்கிரமிப்பை மீட்க உதவியதால் தந்தை, மகன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய சாட்சிகளிடம் நீதிபதி முன்பு வாக்குமூலம் பெற வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு பரபரப்பு உத்தரவிட்டது.
மதுரை,

திருச்சி மாவட்டம் இனாம்புலியூரை சேர்ந்தவர் வீரமலை (வயது 60). விவசாயி. அவருடைய மகன் நல்லதம்பி (42). இவர்களுக்கு கரூர் மாவட்டம் முதலைப்பட்டியில் விவசாய நிலம் உள்ளது. அதில் விவசாயம் செய்வதற்காக அந்த நிலத்தின் அருகில் வீடு கட்டி, அங்கேயே இவர்கள் வசித்தனர். முதலைப்பட்டி ஊராட்சிக்கு சொந்தமான பல ஏக்கர் பரப்பளவில் இருந்த குளத்தை சிலர் ஆக்கிரமித்து விவசாயம் செய்வதாக வக்கீல் ஒருவர் மதுரை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.


அந்த ஆக்கிரமிப்பை மீட்க வீரமலையும், அவரது மகனும் உதவியுள்ளனர். இதனால் அவர்கள் மீது சிலர் ஆத்திரம் அடைந்து அவர்களை பழிவாங்க திட்டம் தீட்டினர்.

இந்தநிலையில் கடந்த மாதம் 29-ந்தேதி காலையில் வீரமலையையும், அவருடைய மகன் நல்லதம்பியையும் ஒரு கும்பல் கொடூரமாக வெட்டிக்கொலை செய்தது. இதுகுறித்து குளித்தலை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதுதொடர்பான செய்திகள் பத்திரிகைகளில் வெளிவந்தன. அதன் அடிப்படையில், தந்தை-மகன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தை மதுரை ஐகோர்ட்டு பதிவாளர் தாமாக முன்வந்து (சூமோட்டோ) வழக்கு தாக்கல் செய்தார். அந்த வழக்கில் “முதலைப்பட்டியில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டதால் வீரமலையும், அவருடைய மகன் நல்லதம்பியும் கொல்லப்பட்டுள்ளனர். எனவே அவர்களின் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்கவும், குடும்பத்தினருக்கு அரசு வேலை மற்றும் உரிய இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும்” என்று கூறப்பட்டு இருந்தது.

இதனை ஏற்கனவே கடந்த 2-ந்தேதி விசாரித்த மதுரை ஐகோர்ட்டு, முதலைப்பட்டி குளம் ஆக்கிரமிப்பு குறித்த அறிக்கையை வருவாய்த்துறை அதிகாரிகளும், கொலை வழக்கின் நிலை குறித்த அறிக்கையை கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டும் தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

இந்தநிலையில் அந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது கொலையுண்ட நல்லதம்பியின் சகோதரி அன்னலட்சுமி, இந்த வழக்கில் தன்னையும் ஒரு மனுதாரராக சேர்க்கக்கோரி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர்.

பின்னர் அரசு வக்கீல் ஆஜராகி, “குற்றம் சாட்டப்பட்டவர்களில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒருவரை மட்டும் கைது செய்ய வேண்டியுள்ளது” என்று தெரிவித்தார்.

மேலும், “சம்பந்தப்பட்ட குளத்தின் ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்பட்டு, ஆழப்படுத்தும் பணி நடக்கிறது. இந்த இரட்டை கொலை வழக்கு விசாரணை கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மேற்பார்வையில் வெளிப்படையாக நடக்கிறது. இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின்னர் நிவாரணம் வழங்குவது குறித்து முடிவு செய்யப்படும்” என்றார்.

அப்போது அன்னலட்சுமியின் வக்கீல் ஆஜராகி, “வீரமலை கொலை செய்யப்பட்ட சம்பவத்தை பார்த்த சிறுவன் பொன்னருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்” என்று கோரினார்.

அதற்கு அரசு வக்கீல், “அவர்களின் குடும்பத்தினருக்கு போதிய பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது” என்றார்.

விசாரணை முடிவில், “நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரும் வழக்குகள்தான் மதுரை ஐகோர்ட்டில் அதிக அளவில் தொடரப்படுகின்றன. இதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காதது ஏன்?” என கேள்வி எழுப்பினர்.

மேலும், “இந்த இரட்டை கொலை சம்பவத்தில் தொடர்புடைய சாட்சிகளிடம் பெறப்படும் வாக்குமூலத்தை கீழ்கோர்ட்டு நீதிபதி முன்பு பெற்று பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். முதலைப்பட்டி குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அது குறித்த அறிக்கையை தோகைமலை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் தாசில்தார் தாக்கல் செய்ய வேண்டும்” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பின்னர் விசாரணையை அடுத்த மாதம் முதல் வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.