எதிர்க்கட்சி தலைவர்களின் போன் ஒட்டு கேட்கப்பட்டதா? முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி விளக்கம்


எதிர்க்கட்சி தலைவர்களின் போன் ஒட்டு கேட்கப்பட்டதா? முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி விளக்கம்
x
தினத்தந்தி 15 Aug 2019 5:00 AM IST (Updated: 15 Aug 2019 4:09 AM IST)
t-max-icont-min-icon

குமாரசாமி முதல்-மந்திரியாக இருந்த போது எதிர்க்கட்சி தலைவர்களின் போனை ஒட்டுகேட்டதாக புகார் எழுந்துள்ளது. இதற்கு அவர் விளக்கம் அளித்துள்ளார்.

பெங்களூரு, 

கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ் -ஜனதா தளம்(எஸ்) கூட்டணி கட்சிகள் 14 மாதங்கள் ஆட்சி செய்தது. அப்போது காங்கிரஸ், பா.ஜனதா, ஜனதா தளம்(எஸ்) கட்சிகளை சேர்ந்த முக்கிய தலைவர்களின் போன் ஒட்டு கேட்கப்பட்டதாக பா.ஜனதாவை சேர்ந்த மூத்த தலைவர் ஆர்.அசோக் எம்.எல்.ஏ. தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். இந்த நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ. எச்.விஸ்வநாத் நேற்று மைசூருவில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில், குமாரசாமி முதல்-மந்திரியாக இருந்தபோது பலரது போன் ஒட்டு கேட்கப்பட்டதாகவும், தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள எம்.எல்.ஏ.க்கள் 17 பேரின் தொலைபேசியும் ஒட்டு கேட்டதாகவும் கூறினார்.

இந்த போன் ஒட்டு கேட்பு விவகாரம் குறித்து விசாரணை நடத்த தலைமை செயலாளருடன் ஆலோசித்து முடிவு எடுப்பதாக முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார். இந்த போன் ஒட்டுகேட்பு விவகாரம் கர்நாடக அரசியலில் புயலை கிளப்பியுள்ளது. இந்த விஷயத்தில் குமாரசாமி கடந்த சில நாட்களாக அமைதி காத்து வந்தார்.

இந்த நிலையில் இதற்கு குமாரசாமி நேற்று விளக்கம் அளித்தார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

முதல்-மந்திரி பதவி நிரந்தரம் அல்ல என்று நான் அந்த பதவியில் இருந்தபோதே அடிக்கடி கூறி வந்தேன். எதிர்க்கட்சி தலைவர்களின் போனை ஒட்டுகேட்டு முதல்-மந்திரி பதவியை காப்பாற்றிக்கொள்ள வேண்டிய அவசியம் எனக்கு இருக்கவில்லை. இந்த விஷயத்தில் சிலர் எனக்கு எதிராக கூறிய குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது.

இவ்வாறு குமாரசாமி தெரிவித்துள்ளார். 

Next Story