கடையம் அருகே ராஜீவ்காந்தி சிலை உடைப்பு; காங்கிரசார் ஆர்ப்பாட்டம்


கடையம் அருகே ராஜீவ்காந்தி சிலை உடைப்பு; காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 15 Aug 2019 4:57 AM IST (Updated: 15 Aug 2019 4:57 AM IST)
t-max-icont-min-icon

கடையம் அருகே ராஜீவ்காந்தி சிலை உடைக்கப்பட்டது. இதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பட்டம் நடத்தினர். மேலும், அவர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடையம்,

நெல்லை மாவட்டம் கடையம் அருகே பாப்பான்குளம் மெயின் ரோட்டில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மார்பளவு சிலை உள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு இந்த சிலை சமூக விரோதிகளால் சேதப்படுத்தபட்டது. இதனையடுத்து இந்த சிலைக்கு இரும்பு கம்பியால் ஆன கூண்டு அமைக்கப்பட்டது.

நேற்று முன்தினம் நள்ளிரவில் இந்த கூண்டின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர். பின்னர் அவர்கள், ராஜீவ்காந்தி சிலையை உடைத்து சேதப்படுத்திவிட்டு தப்பிச்சென்றனர். நேற்று காலையில் இதனை அறிந்த அப்பகுதியை சேர்ந்த காங்கிரஸ் கட்சியினர் அங்கு திரண்டு வந்தனர். இச்சம்பவத்தை கண்டித்து அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சிலையை சேதப்படுத்தியவர்களை கைது செய்யக்கோரி கோஷங்கள் எழுப்பி, சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த அம்பை துணை போலீஸ் சூப்பிரண்டு ஜாகிர் உசேன், கடையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆதிலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் காஜாமுகைதீன் மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் கூறியதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

நெல்லையில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது சங்கரபாண்டியன் கூறுகையில், “முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி சிலையை சேதப்படுத்தியவர்களை உடனே போலீசார் கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கவேண்டும். அங்கு முழு உருவ வெண்கல சிலை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றவாளிகளை உடனே கைது செய்யாவிட்டால் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபடுவோம்“ என்றார்.

இதுகுறித்து முன்னாள் எம்.பி. ராமசுப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடையம் அருகே பாப்பான்குளத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி சிலை எனது தலைமையில் கடந்த 2010-ம் ஆண்டு நிறுவப்பட்டது. 2014-ம் ஆண்டு இந்த சிலை மர்மநபர்களால் சேதப்படுத்தப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் சம்பந்தப்பட்ட மர்மநபர்களை கைது செய்தனர். பின்னர் அதே வருடத்தில் மீண்டும் சிலையை நிறுவினோம். ஆனால் தற்போதும் இந்த சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது கண்டனத்துக்குரியது. ராஜீவ்காந்தி போன்ற பெரிய தலைவர்களின் சிலைகளை சேதப்படுத்துவதால் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படுகிறது. எனவே, சிலையை சேதப்படுத்திய குற்றவாளிகளை போலீசார் விரைவில் கைது செய்ய வேண்டும்“ என்று கூறி உள்ளார்.


Next Story