மாவட்ட செய்திகள்

பாபநாசம் அருகே சொத்து தகராறில் தொழிலாளி அடித்துக்கொலை தாய்- அண்ணன் உள்பட 4 பேர் கைது + "||" + Four arrested, including mother and brother, beaten up by worker in dispute over property near Papanasam

பாபநாசம் அருகே சொத்து தகராறில் தொழிலாளி அடித்துக்கொலை தாய்- அண்ணன் உள்பட 4 பேர் கைது

பாபநாசம் அருகே சொத்து தகராறில் தொழிலாளி அடித்துக்கொலை தாய்- அண்ணன் உள்பட 4 பேர் கைது
கபிஸ்தலம் அருகே சொத்து தகராறில் தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது தாய்- அண்ணன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.
கபிஸ்தலம்,

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள கபிஸ்தலம் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட மருத்துவக்குடி கிராமம் தெற்கு தெருவை சேர்ந்தவர் ராஜாங்கம். இவருடைய மனைவி சுசீலா(வயது59). இவர்களுடைய மகன்கள் கந்தகிரிவாசன்(42), ரமேஷ்(40). கூலித்தொழிலாளர்களான இவர்கள் 2 பேருக்கும் திருமணமாகி விட்டது. இதில் கந்தகிரிவாசன் தனது மனைவி தேவிகாவுடன்(40) தனியாகவும், ரமேஷ் தனது மனைவி உஷாராணியுடன் தனியாகவும் மருத்துவக்குடி பகுதியில் வசித்து வந்தனர்.


கந்தகிரிவாசனுக்கும் அவரது தம்பி ரமேசுக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்தது. சம்பவத்தன்று உஷாராணி தனது 2 குழந்தைகளுடன் கும்பகோணம் அருகே கொட்டையூரில் உள்ள தனது தந்தை வீட்டுக்கு சென்றார். இதனால் மருத்துவக்குடியில் உள்ள வீட்டில் ரமேஷ் தனியாக இருந்தார். அப்போது அவர் தனது அண்ணன் கந்தகிரிவாசனிடம் சென்று தனக்கு சேர வேண்டிய சொத்துக்களை பிரித்து தருமாறு கேட்டார்.

அடித்துக்கொலை

இதனால் அவருக்கும் அவரது அண்ணனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த தகராறு முற்றியதில் ஆத்திரமடைந்த கந்தகிரிவாசன் அவருடைய மனைவி தேவிகா மற்றும் ரமேசின் தாய் சுசீலா ஆகியோர் சேர்ந்து ரமேசை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் தலையில் பலத்த காயமடைந்த ரமேஷ் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த ரமேசின் தாய் சுசீலா, அண்ணன் கந்தகிரிவாசன், அண்ணி தேவிகா ஆகியோர் ரமேஷ் இயற்கையாக மரணம் அடைந்து விட்டார் என அக்கம்பக்கத்தினரை நம்ப வைக்க முடிவு செய்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் ரமேசின் உடலை குளிப்பாட்டினர்.

பின்னர் அவர்கள் ரமேஷ் உடலை நாற்காலியில் அமர வைத்து விட்டு ஊர் மக்களிடம் ரமேஷ் இயற்கையாக மரணம் அடைந்து விட்டார் என கூறினர். இதற்கு அதே பகுதியை சேர்ந்த சங்கர்(38), கோவிந்தராஜ்(48) ஆகியோர் உதவி செய்தனர். ரமேஷ் இறந்த தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினர் துக்கம் விசாரிக்க வீட்டில் கூடினர். இந்தநிலையில் ரமேஷ் இறந்த தகவல் கும்பகோணத்தில் இருந்த அவரது மனைவி உஷாராணிக்கு தெரிவிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கும்பகோணத்தில் இருந்து புறப்பட்டு மருத்துவக்குடிக்கு வந்து தனது கணவர் உடலை பார்த்து கதறி அழுதார்.

உடலில் காயங்கள்

அப்போது தனது கணவர் உடலில் காயங்கள் இருப்பதை கண்டு சந்தேகம் அடைந்த அவர் கபிஸ்தலம் போலீஸ் நிலையத்துக்கு விரைந்து சென்று தனது கணவர் சாவில் மர்மம் உள்ளது என புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து கபிஸ்தலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகரத்தினம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ரமேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரமேஷ் உடலை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் கொலை செய்யப்பட்டு உள்ளார் என்பதை உறுதி செய்தனர். இதைத்தொடர்ந்து கபிஸ்தலம் போலீசார் ரமேசின் தாய் சுசீலா, அண்ணன் கந்தகிரிவாசன் மற்றும் இவர்களுக்கு உதவி செய்த சங்கர், கோவிந்தராஜ் ஆகிய 4 பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள தேவிகாவை தேடி வருகிறார்கள். சொத்து தகராறில் தொழிலாளி ஒருவரை அடித்துக்கொன்றதாக அவரது தாய் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பாபநாசம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.